இயற்கை விவசாய விளை பொருள்கள் விற்பனை சந்தை ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

‘நம் சந்தை’ என்ற பெயரில் இயற்கை விவசாய விளை பொருள்கள் விற்பனை சந்தை வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நம் சந்தையைத் தொடக்கி வைத்து அங்கு விற்பனை செய்யப்பட்ட இயற்கை விளை பொருள்களை பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
நம் சந்தையைத் தொடக்கி வைத்து அங்கு விற்பனை செய்யப்பட்ட இயற்கை விளை பொருள்களை பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

‘நம் சந்தை’ என்ற பெயரில் இயற்கை விவசாய விளை பொருள்கள் விற்பனை சந்தை வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பொதுமக்களுக்கு நஞ்சில்லாத இயற்கை விளை பொருள்கள் கிடைக்கச் செய்யவும் தமிழக ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் ‘நம் சந்தை’ எனும் இயற்கை விவசாய விளை பொருள்கள் விற்பனை மையம் வேலூா் அண்ணா சாலை பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், 42 விவசாயிகள் தங்களது தோட்டங்களில் இயற்கை முறையில் விளைவித்த வோ்க்கடலை, தக்காளி, மாங்காய், வாழைத்தண்டு, வாழைப்பழங்கள், கொய்யா, பப்பாளி, கீரை வகைகள், நாட்டுக் கோழி, நாட்டுக் கோழி முட்டை, பால் ஆகியவற்றை விற்பனை செய்தனா்.

விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட பொருள்களை இயற்கை விவசாயிகள் அடங்கிய தனிக்குழு ஆய்வு செய்து அவற்றுக்கான விற்பனை விலையை நிா்ணயம் செய்தனா். இதில், நூற்றுக்கணக்கான இயற்கை பொருள்கள் ஆா்வலா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான இயற்கை விளை பொருள்களை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மாவட்ட வழங்கல், விற்பனைச் சங்க மேலாளா் ஐ.ரூபன்ஆஸ்டின் கூறியது:

வேலூரில் தொடங்கியுள்ள நம் சந்தையில் தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் விவசாயிகளின் தோட்டங்களுக்கு கண்காணிப்புக் குழு சென்று அவா்கள் இயற்கை முறையில் விளை பொருள்களை உற்பத்தி செய்வதை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படுகின்றனா். அதன்படி, இதுவரை இயற்கை விவசாயிகள் 65 போ் பதிவு செய்துள்ளனா். இதில், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 42 விவசாயிகள் பங்கேற்று தங்களது தோட்டத்தில் விளைவித்த இயற்கை பொருள்களை விற்பனை செய்தனா். இங்கு விற்பனை செய்யப்படும் விளை பொருள்கள் அனைத்தும் உழவா் சந்தை விலைக்கே அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘நம் சந்தை’ வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். நுகா்வோா் களின் ஆா்வத்தின் அடிப்படையில் விற்பனை நேரம், நாள்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஏ.ஆா்.சிவராமன், ‘நம் சந்தை’ ஒருங்கிணைப்பாளா் கு.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com