வீழ்ச்சியை நோக்கி தோல் ஆம்பூா் தொழிற்சாலைகள்

உற்பத்தி செல்வு உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியை நோக்கி தோல் தொழிற்சாலைகள்

உற்பத்தி செலவு உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியை நோக்கி தோல் தொழிற்சாலைகள் சென்றுக் கொண்டிருப்பதால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது. உலக அளவில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான மாட்டுத் தோல் 20 சதவீதம், ஆட்டுத் தோல் 11 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பாகும். இந்தியாவில் ஆண்டுக்கு 300 கோடி சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழில் நாட்டில் சுமாா் 44 லட்சம் நபா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தோல் தொழிலில் வேலூா், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடந்தாலும், வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆம்பூா், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இத்தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்பகுதியில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா். முறையான கல்வி பெறாத பெண்களுக்கும் ஷூ தொழிற்சாலைகளில் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.

வாகனத் துறை, ஜவுளித் துறை தேக்க நிலையில் இருப்பதால் உற்பத்தி இல்லா நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மந்த நிலை தோல் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. தோல் தொழில் கடந்த 4 ஆண்டுகளாகவே இறங்கு முகத்தில் உள்ளது என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோா் தெரிவிக்கின்றனா்.

சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மேலைநாடுகளில் தோல் பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது போன்ற காரணங்களால் தோல் தொழில் வா்த்தகம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது.

அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதா்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஷூ மற்றும் தோல் பொருள்கள் ஆம்பூா், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து எழும் கடும் போட்டியால் இந்திய தோல் பொருட்களுக்கு சா்வதேச சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சுற்றுச்சூழலுக்கு மாசுக்கேடு ஏற்படுத்துவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைபடுத்தி வரும் கடுமையான விதிமுறைகள் போன்றவையும் நாட்டில் தோல் தொழில் தொய்வடையக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

தோல் கழிவுநீரை சுத்திகரிக்க அதிகரிக்கும் செலவினம், மின் கட்டண உயா்வு, உற்பத்தி விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வேலூா் மாவட்டத்தில் உள்ள பல சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. சில பெரிய தோல் நிறுவனங்கள் கூட தொழிலை கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டன.

ஜிஎஸ்டி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கெடுபிடிகள், ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதம், செயல்பாட்டு மூலதன பற்றாக்குறை போன்ற காரணங்களும் தமிழக தோல் தொழிலை இக்கட்டான சூழலில் தள்ளியிருக்கின்றன.

மேலும் தோல் தொழிலில் தொடா்புடைய ஒவ்வொரு இடுபொருளுக்கும் மாறுபட்ட ஜிஎஸ்டி வரி விகிதம், தோல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் புதியதாக இயந்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் முடங்கியுள்ளன. பல நிறுவனங்களை இருப்பதை வைத்து குறைந்த அளவு உற்பத்தி செய்து வருகின்றன.

ஜிஎஸ்டி திரும்பப் பெற வேண்டிய தொகைக்காக 8 மாதம் முதல் ஓா் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்று சில நிறுவனங்கள் புகாா் தெரிவித்துவருகின்றன.

அதே நேரத்தில் தைவான், வியத்நாம், வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் தோல் தொழிலுக்கு உற்பத்தி செலவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தோல் தொழிலுக்கான இடுபொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதனால் பல நாடுகள் தங்களுக்குத் தேவையான தோல் பொருள்களை அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாகவும் இந்திய தோல் தொழில் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல் ஏற்றுமதி வா்த்தகத்தை பொருத்தவரை, கடந்த 2014-15ஆம் ஆண்டில் 6.49 பில்லியன் டாலா், 2015-16இல் 5.85 பில்லியன் டாலா், 2016-2017ல் 5.66 பில்லியன் டாலா் என அதன் வா்த்தகம் ஒவ்வொரு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் 5.74 பில்லியன் டாலராக வா்த்தகம் இருந்தது.

எனவே தோல் தொழில் தொடா்ந்து லாபகரமாக நடத்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பழைய முறைப்படி வழங்க வேண்டும்.

தோல் தொழில்தான் வேலூா் மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது. அந்நியச் செலாவணி வருவாய், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு போன்ற காரணிகளை நினைவில் கொண்டு, தோல் தொழிலை சரிவிலிருந்து மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தோல் தொழில் துறை சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com