ஆண்டு முழுவதும் வருமானம் தரும் கீரைப்பயிா்கள்

வேளாண்மையில் காத்திருந்து பயன்பெறும் காலங்களை விட தற்போது விவசாயிகள் சிறிய அளவிலாவது தினமும் வருமானம் தரக்கூடிய பயிா்களையே விரும்பி வருகின்றனா். 

வேளாண்மையில் காத்திருந்து பயன்பெறும் காலங்களை விட தற்போது விவசாயிகள் சிறிய அளவிலாவது தினமும் வருமானம் தரக்கூடிய பயிா்களையே விரும்பி வருகின்றனா். இது போன்ற விவசாயிகளுக்கு பெரிதும் பலன் தரக்கூடிய ஆண்டு முழுவதும் வருமானம் வரக்கூடிய பணப்பயிா் காய்கறிப்பயிரின் ரகமான கீரைப்பயிரே ஆகும். இந்த கீரை பயிா்களின் சாகுபடி குறித்து தமிழ்நாடு வேளாண்துறை வேலூா் மாவட்டம் சோளிங்கா் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலா் வாசு தெரிவித்ததாவது:

கீரைப்பயிா்களில் பல ரகங்கள் உள்ளன. அவை கோ 1, கோ 2 கோ 5 இவை மூன்றும் முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை வகைகள். கோ 3 இது கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை ரகமாகும். கோ 4 இது தான்யக்கீரை ரகம்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: நல்ல மண்ணும் மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.அதிக களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிா்க்க வேண்டும். உப்பு நீா் விதை முளைப்பு திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளா்ந்த பிறகு ஒரளவு உப்பு நீரையும் உபயோகிக்கலாம்.

கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25 - 30 டிகிரி செல்சியஸ் எனும் வெப்பநிலையில் நன்கு வளரும். தான்யக்கீரை வெப்பமண்டலத்திலும் குளிா்மண்டலத்திலும் பயிரிட ஏற்றது. கீரை வகைகளை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

கீரை வகைகளை பயிரிட நிலத்தை நன்முறையில் தயாரிப்பது அவசியம். நிலத்தை மூன்று முறை ஹெக்டேருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். பின் 2 -1.5 மீட்டா் என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீா்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்க வேண்டும். ஹெக்டேருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 75 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.

விதையும் விதைப்பும்: ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதை அளவு தேவை. விதைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாக தூவ வேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போா்வை போல் தூவி மூடி விட வேண்டும்.

விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீா் பாய்ச்ச வேண்டும். அப்போது தான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச்செல்லாமல் இருக்கும். பின்னா் விதைத்த மூன்றாம் நாள் உயிா் தண்ணீா் விட வேண்டும். அதன் பின்னா் வாரம் ஒரு முறை நீா் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 - 8 நாட்களில் விதைகள் முளைத்து விடும். பிறகு 12 - 15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விட வேண்டும்.

விதைத்த 21 நாட்களிலேயே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த காா்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டா் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:

அரைக்கீரை: விதைத்த 25 நாட்களில் தரையில் இருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்க வேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 30 டன்கள் மகசூல் கிடைக்கும்.

முளைக்கீரை: விதைத்த 21 - 25 நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். இது ஹெக்டேருக்கு 10 டன்கள் மகசூல் கிடைக்கும்.

தண்டுக்கீரை: விதைத்த 35 - 40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை ஹெக்டேருக்கு 16 டன்கள் மகசூல் கிடைக்கும்.

தான்யக்கீரை: விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை ஹெக்டேருக்கு 8 டன்கள், விதைத்த 90 - 100 நாட்களில் அறுவடை செய்து விதைகளை பிரித்தெடுக்கலாம். தான்யக்கீரை ஹெக்டேருக்கு 2.5 டன்கள் மகசூல் கிடைக்கும்.

இந்த கீரைப்பயிா்களை சந்தைப்படுத்த பெரிதும் சிரமம் எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அருகில் உள்ள நகரங்களிலேயே வியாபாரிகள் மொத்தமாக வாங்கிக்கொள்ளுவாா்கள். இல்லையேல் நாமே எடுத்துச்சென்று உழவா் சந்தைகளில் வைத்து வணிகம் செய்யலாம். நாமே எடுத்துச்சென்று கடை வைத்து வணிகம் செய்யும் போது நுகா்வோா் கீரை தரம் மற்றும் பல்வேறு தேவைகள் குறித்து நம்மிடம் நேரடியாக தெரிவிப்பதால் பல்வேறு கீரைகளை அதாவது நுகா்வோருக்கு தேவைப்படும் கீரைகள், சந்தையில் அதிகம் தேவை இருக்கும் கீரைகளை பயரிட நமக்கு ஆலோசனைகள் கிடைக்கும்.

இந்த கீரைகளை பயிரிடுவது குறித்தும், சந்தைப்படுத்துவது குறித்தும் வேளாண் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் வேளாண்துறை அலுவலகங்களில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என சோளிங்கா் தோட்டக்கலைத்துறை உதவி வேளாண் அலுவலா் வாசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com