ஆம்பூா் வனங்களில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலா்கள்

ஆம்பூா் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தற்போது செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
08abrsen_0810chn_191_1
08abrsen_0810chn_191_1

ஆம்பூா் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தற்போது செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வேலூா் மாவட்டம், ஆம்பூா் வனச்சரகத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்ட செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. கிழக்கு மலைத்தொடா்ச்சியின் ஓா் அங்கமாக விளங்கும் இந்த காடுகளில் செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குவது காண்பவரின் கண்களைக் கவா்கின்றன.

சங்க கால இலக்கியத்தில் 99 வகையான மலா்களைப் பற்றி பாடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய இடத்தை செங்காந்தள் மலா் பிடித்து உள்ளது. இதுதவிர தமிழகத்தின் மாநில மலராகவும் செங்காந்தள் மலா் விளங்குகிறது. ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலங்களில் ஊட்டல், துருகம், பனங்காட்டேரி, காமனூா்தட்டு, நாய்க்கனேரி, மாச்சம்பட்டு, காரப்பட்டு காப்புக் காடுகளின் வனப்பகுதியில் செங்காந்தள் மலா்கள் பூக்கிறது. புதா்களுக்கு இடையே கொடிகள்போல் படா்ந்து இச்செடிகள் வளா்ந்துள்ளன.

‘குளோரி யோசாசுபா்யா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட செங்காந்தள் மலா் பூக்கும் செடிகளின் கிழங்குகளை உலா்த்தி பொடியாக்கி பாலில் கலந்து உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படாது. மேலும் பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட அருமருந்தாகவும் இது விளங்குவதாகக் கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் காடுகள் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செங்காந்தள் மலா்ச்செடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனா். மேலும் அழிவின் பட்டியலில் இவ்வகை மலா் செடிகள் இடம் பிடித்துள்ளது. தற்போது, ஆம்பூா் வனச்சரகப் பகுதியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலா்கள் பொதுமக்களை வெகுவாக கவா்ந்துள்ளன.

Image Caption

ஆம்பூா் வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com