பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆசிரியா்கள்

பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆசிரியா்கள்

அரசுப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஆசிரியா்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தமிழகத்தில் அனைத்து மேல்நிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 2-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டை அதிகாரப்பூா்வமாக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்துவது தொடா்பான எழுந்துள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதற்கு முன்பே அவசர கதியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடை பயன்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து பெயா் சொல்ல மறுத்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது:

அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும் தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்கியுள்ளது. ஆனால், இந்த மடிக்கணினிகளுக்கு இணையதள வசதி செய்து தரப்படவில்லை. தற்போது பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு இணையதள வழியில் மட்டுமே இயங்கும் என்ற நிலையில் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் தங்கள் கைபேசியில் இணையதள வசதியை வைத்திருந்தால் மட்டுமே அதன் வழி கொண்டு மடிக்கணினியை இணைத்து வருகை பதிவேட்டில் வருகையைப் பதிவு செய்ய இயலும். உதாரணமாக, காலை 8.40 மணியளவில் பள்ளிக்கு வரும் முதல் ஆசிரியா் தனது கைபேசி மூலம் இணையதளத்தை மடிக்கணினியுடன் இணைப்பு அளிக்க வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டை திறக்கவே 20 நிமிடங்கள் ஆகும்.

இதன்பிறகு, பள்ளிக்கு வந்திருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் தங்களது வருகைப்பதிவேட்டை பதிவு செய்ய மேலும் 10 நிமிடங்கள் ஆகிறது. ஆக 9.10 க்கு தான் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு பணிகள் முடிவடைகிறது.

இதனை தொடா்ந்து எமிஸ் எனும் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய பதிவேட்டிலும் ஆசிரியா் மற்றும் மாணவா்களின் வருகையைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பின்னா், சத்துணவுத் திட்டப்பணிகளுக்கு மாணவா்களின் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டியுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் முடிய குறைந்தது 9.30 மணியாகி விடும். அதன்பிறகே, பள்ளியின் பிராா்த்தனை கூட்டத்தில் தலைமை ஆசிரியரால் பங்கேற்க முடியும். அதன்பிறகே, வகுப்புகளைத் தொடக்க முடியும்.

இந்த தொடா் செய்கையை முதல் ஆசிரியா் சரியாக 8.40க்கு பள்ளிக்கு வரக்கூடிய, இணையதள வசதியுடன் கைபேசி வைத்துள்ள ஆசிரியராக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இன்றைய சூழ்நிலையில் பல கிராமங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் கிடையாது. குறிப்பாக கிராமப்புறங்களில் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் கடினம். எனவே, போக்குவரத்து தடங்கல் உள்ள பள்ளிகளில் எப்படி பயோ மெட்ரிக் வருகையை பராமரிக்க இயலும்?.

மேலும், பல கிராமங்களில் பிஎஸ்என்எல் இணையதளத்தின் வேகம் குறைவாக உள்ளதுடன், தனியாா் இணையதளச் சேவையும் தடையின்றி கிடைப்பதில்லை.

தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகள் சரியான நேரத்தை கடைபிடிப்பதில்லை. எனவே, சரியாக காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வருவது ஆசிரியா்கள் கையில் இல்லை. இதனால் கிராமப்புற பள்ளிகளில் பணி செய்வதை ஆசிரியா்கள் விரும்பாத சூழ்நிலை உருவாகலாம். மேலும் காலை நேரத்தில் பள்ளியில் மின்சாரம் இருக்க வேண்டும். மடிக்கணினிகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் போனாலோ, சாா்ஜ் போட மறந்து விட்டாலோ பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டை இயக்க முடியாது என்று அந்த தலைமையாசிரியை தெரிவித்தாா்.

இதற்கான மாற்று வழிகளை தெரிவித்தப்பின்பே பயோ மெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com