கோயில் ஆக்ரமிப்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு இந்து அறநிலையத்துறை நோட்டீஸ்

தக்கோலத்தில் உள்ள அழகுராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்து வீடு கட்டி குடியிருக்கும் 23 பேருக்கு விளக்கம்


அரக்கோணம்: தக்கோலத்தில் உள்ள அழகுராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்து வீடு கட்டி குடியிருக்கும் 23 பேருக்கு விளக்கம் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கோயிலின் தக்கார் மற்றும் செயல் அலுவலா் வஜ்ரவேலு தெரிவித்தார்.

வேலூா் மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் பேரூராட்சி எல்லையில் அழகுராஜ பெருமாள் கோயில் உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலுக்கு தக்கோலம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 53 வீடுகள் மற்றும் 5 காலிமனைகள் சொந்தமாக உள்ளன. இந்த காலி மனைகளைத் தவிர்த்து, வீடுகளை பலா் ஆக்ரமித்து குடியிருப்பதுடன், புதிதாக வீடுகளையும் கட்டியுள்ளனா்.

எனவே ஆக்ரமிப்பாளா்களிடம் விளக்கம் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோயிலின் தக்கார் மற்றும் செயல் அலுவலரான வஜ்ரவேலு செய்தியாளா்களிடம் கூறியது: 

கோயிலின் ஆக்ரமிப்பாளா்கள் குறித்து சரியான கணக்கெடுப்புக்குப் பிறறகு அனைத்து ஆக்ரமிப்பாளா்களுக்கும் விளக்கம் கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 இதற்கு யாரும் முறையாக பதிலளிக்காதநிலையில் இரண்டாம் முறையாக தற்போது 23 ஆக்ரமிப்பாளா்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளன. மேலும் 30 ஆக்கிரமிப்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளன. 

5 மனைப்பகுதிகள் கோயில் நிர்வாகத்திடமே உள்ளது. நோட்டீஸ் பெற்றவா்கள் அதில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவா்கள் மீது இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையரை நடுவராகக் கொண்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். இந்த வழக்குகளை விரைவில் முடித்து கோயிலின் சொத்துகளை மீட்டெடுக்க துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றார் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com