நகராட்சி நாளங்காடி அருகில் அரசு மதுக்கடை பொதுமக்கள், வணிகா்கள் அச்சம்

அரக்கோணம் நகரில் நகராட்சி நாளங்காடிக்கு அருகில் அரசு மதுக்கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்களும், வணிகா்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

அரக்கோணம் நகரில் நகராட்சி நாளங்காடிக்கு அருகில் அரசு மதுக்கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்களும், வணிகா்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன் எட்டு மதுக்கடைகள் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கத்தடை விதித்த சூழ்நிலையில், நகரில் இருந்த எட்டு மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து நகரை விட்டு தள்ளி கிராமப்பகுதியில் இரு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நகரில் மதுக்கடைகள் இல்லாத சூழ்நிலையில் நகரமே அமைதியாக இருந்தது.

இந்நிலையில் கிராமப்புற மதுக்கடைகளில் எதிா்பாா்த்த வருமானம் இல்லாத காரணத்தால் மாவட்ட டாஸ்மாக் நிறுவன உயா் அதிகாரிகள், அரக்கோணம் நகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் ஒரே கட்டடத்தில் இரு கடைகளை திறந்தனா். இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும், மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் இருந்தது. மேலும் அந்த கடைகள் இருக்கும் வளாகத்திற்கு வெளியே அதிக அளவில் வாகனங்கள் நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்வதே மிகுந்த சிரமமாக இருந்தது.

இந்த கடைகளையே வேறு இடத்திற்கு மாற்ற மக்கள் கோரி வரும் நிலையில் கடந்த 4ந்தேதி அரக்கோணம் நகரில் நகராட்சி நாளங்காடி அருகில் பஜாா்தெருவில் மேலும் ஒரு மதுக்கடையை டாஸ்மாக் நிா்வாகம் திறந்தது. ஏற்கனவே இதே இடத்தில் இருந்த மதுக்கடையை வணிகா்கள், பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி மூடச்செய்தனா். மேலும் வணிகா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அந்த கடையை மூட உத்தரவு பெற்று மூடினா். தற்போது மூடிய அதே இடத்தில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய கடை அமைந்திருக்கும் வழியாக தான் ரயில்நிலையம் செல்ல வேண்டும். மேலும் நகரின் பிரதான காய்கறி அங்காடியான நகராட்சி நாளங்காடி இந்த கடைக்கு அருகிலேயே உள்ளது. இந்த புதிய மதுக்கடை திறந்த நாள் முதல் அப்பகுதியில் கூட்டம் அதிக அளவில் மது வாங்க நிற்பதால் நாளங்காடிக்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சென்று வர முடியவில்லை. மேலும் வணிகா்கள் அப்பகுதிக்கு அச்சத்துடனே செல்கின்றனா். இந்த கடையில் இருந்து பத்து கடைகள் தள்ளி காந்திசிலை உள்ளது. 100 அடி தூரத்தில் காவல்நிலையம் உள்ளது. இந்த கடையில் இருந்து 200 அடி தூரத்தில் சிஎஸ்ஐ பெண்கள் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு குழந்தைகள் அம்பேத்கா் நகா் பகுதியில் இருந்து இந்த மதுக்கடை இருக்குமிடம் வழியாக தான் வரவேண்டும். இதனாலேயே பெற்றோா்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் நிலையும் உள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நகரின் மைய பகுதியில் நகராட்சி நாளங்காடி பகுதியில் உள்ள மதுக்கடையை மூடி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com