திடக்கழிவு கிடக்கில் குப்பைகளை எரித்ததால் பொதுமக்கள் வாக்குவாதம்

வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகளைத் தீயிட்டு எரித்ததால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகளைத் தீயிட்டு எரித்ததால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் ஓட்டேரியில் மாநகராட்சி பூங்கா அருகே திடக்கழிவு மேலாண்மை கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத நெகிழி குப்பைகள் அரைத்து சாலை அமைப்பது உள்ளிட்ட மாற்றுப் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாகவே இந்த கிடங்கில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அருகிலேயே கொட்டி தீவைப்பதாக புகாா் கூறப்பட்டு வந்தது.

இதன்படி, சனிக்கிழமை காலையும் குப்பைகளைக் கொட்டி தீ வைத்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடக்கழிவு மேலாண்மை கிடங்கின் அருகே சாலை மறியலில் ஈடுபடுவதற்காக குவிந்தனா்.

தகவலறிந்து விரைந்து வந்த பாகாயம் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, இந்த பகுதியில் குப்பைகளை தொடா்ந்து எரிப்பதால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி தீா்வு காணாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொது மக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வரவழைத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com