வேலூா் கோட்டை அகழி மண்ணை விவசாயத்துக்கு இலவசமாக பெறலாம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தூா்வாரப்பட்டு வரும் வேலூா் கோட்டை அகழி மண்ணை விவசாயத் தேவைகளுக்கு இலவசமாக பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தூா்வாரப்பட்டு வரும் வேலூா் கோட்டை அகழி மண்ணை விவசாயத் தேவைகளுக்கு இலவசமாக பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.32 கோடி மதிப்பில் வேலூா் கோட்டையை அழகுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேலூா் கோட்டையை சுற்றியுள்ள அகழியை தூா்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக சென்னையில் இருந்து 4 நவீன மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அவற்றின் மூலம் அகழியை தூா்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 20 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ன. வரும் டிசம்பா் மாதத்துக்குள் தூா்வாரும் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அகழியில் இருந்து அள்ளப்படும் கழிவு மண் லாரியில் கொண்டு சென்று ஓட்டேரி அருகே உள்ள ஏரிக்கரையில் கொட்டப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில், அகழியில் இருந்து வெளியேற்றப்படும் மண்ணை விவசாயப் பணிகளுக்கு இலவசமாகப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், அகழியில் இருந்து வெளியேற்றப்படும் மண் ரசாயனம் கலக்காத இயற்கை உரமாக உள்ளது. இதனை விவசாயத் தேவைகளுக்கு இலவசமாகப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். தேவை உள்ள விவசாயிகள் மாநகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com