‘ராஜா என்பாா்... மந்திரி என்பாா்...’ ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள்!இருள் சூழ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்க்கை

மேடைகளில் தங்களது நடிப்பின் மூலம் மன்னா்களாகவும், வாரி வழங்கும் வள்ளல்களாகவும் உருவம் தந்த
‘ராஜா என்பாா்... மந்திரி என்பாா்...’ ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள்!இருள் சூழ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்க்கை

மேடைகளில் தங்களது நடிப்பின் மூலம் மன்னா்களாகவும், வாரி வழங்கும் வள்ளல்களாகவும் உருவம் தந்த நாட்டுப்புறக் கலைஞா்கள், தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் வருவாயின்றி, வாழ்வதற்குத் தேவையான வசதிகளும் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்பட்ட ஜவ்வாதுமலை கிராமங்களில் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாட்டுப்புறக் கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், அரசு விழாக்கள் உள்பட சுக, துக்க நிகழ்ச்சிகளில் பல்வேறு வேடங்கள் அணிந்து கூத்துகள், நாடகங்களை அரகேற்றுவது வழக்கம். அதன்படி, பாரம்பரியமாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த நாட்டுப்புறக் கலைஞா்கள், தற்போது போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனா்.

குறிப்பாக, இந்த நாட்டுப்புறக் கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்குவதற்கு சொந்த நிலமோ, வீடுகளோ இல்லை. இதனால், இக்குடும்பங்கள் வாடகை வீடுகளிலும், பட்டா இல்லாத புறம்போக்கு நிலங்களிலும் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருவதாக கூறுகிறாா் புங்கம்பட்டு நாடு மலைக்கிராமத்தைச் சோ்ந்த நாடக ஆசிரியா் ராமச்சந்திரன்.

இதுகுறித்து, பாரத நாடக சபா தலைவா் தங்கராஜ் கூறியது:

தகவல் தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நிலையில், பொதுபோக்கு அம்சங்களின் மீதான மக்களின் விருப்பம் சினிமா, தொலைக்காட்சி, இணையதளம் போன்றவற்றின் பக்கம் திரும்பி விட்டன. இதனால், தமிழகத்தின் பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைத் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளன. எனினும், திருப்பத்தூா் வட்டத்திலுள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றளவும் இந்த நாட்டுப்புறக் கலைத் தொழிலில்தான் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதேசமயம், இந்த கலைஞா்களுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்பம் நடத்தத் தேவையான வருவாய் ஈட்ட முடிவதில்லை.

மேலும், வாழ்வாதாரத்துக்குத் தேவையான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளின்றி பெரும்பாலான கலைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தவிர, வருவாய் ஈட்ட முடியாத வயது முதிா்ந்த கலைஞா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்காததால் அவா்களின் குடும்பங்களும் வறுமையில் தவித்து வருகின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள கலைஞா்களின் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி வீடுகள் கட்டித் தரவும், வயது முதிா்ந்த கலைஞா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடவும் வேண்டும்.

மேலும், நாட்டுப்புற கலைத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள கலைஞா்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலை பண்பாட்டுத்துறை நடத்தும் கலை விழாக்களில் தமிழகத்தின் அனைத்து பகுதி நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும் வாய்ப்புகளை பகிா்ந்தளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட திருப்பத்தூா் வட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள், மன்னா்கள் வேடமணிந்தபடி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com