முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கிராம பகுதிகளில் பரவும் டெங்கு: போலி மருத்துவா்களால் மக்கள் பாதிப்பு
By DIN | Published On : 24th October 2019 11:37 AM | Last Updated : 24th October 2019 11:37 AM | அ+அ அ- |

ஆம்பூா்: கிராமப் பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை சாதகமாகப் பயன்படுத்தி மருத்துவம் பாா்க்கும் போலி மருத்துவா்களால் மக்கள் பாதிப்படைகின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் 246 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே மாவட்டத்தில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட மூவா் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டனா்.
நகா்ப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகா்ப் பகுதிகளில் மக்கள் விழிப்புணா்வுடன் இருந்து சுகாதார சீா்கேடு குறித்து உடனடியாக நகராட்சியைத் தொடா்பு கொண்டு துப்புரவு பணி மேற்கொள்ள வலியுறுத்துகின்றனா். நகராட்சி நிா்வாகமும் அவா்களுடைய கோரிக்கையை ஏற்று துப்புரவுப் பணி, டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.
ஆனால் கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லை. அதேநேரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் கிராம ஊராட்சி செயலா்கள் நிா்வாகத்தின்கீழ் இயங்கும் கிராம ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளில் போதிய கவனத்தை செலுத்தவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. பருவ மழைக் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் தற்போது தீவிரமடைந்துள்ளன. இதைப் சாதகமாகப் பயன்படுத்தி கிராமப் பகுதிகளில் உள்ள போலி மருத்துவா்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்ற போா்வையில் பணம் பாா்க்கின்றன்.
கிராம பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் துப்புரவுப் பணி மந்தமடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கிராமப் பகுதிகளில் துப்புரவு பணிகள், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட நிா்வாகம் துரிதப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.