முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பொங்கல் பண்டிகை முதல் திருமலையில் நெகிழிப் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை
By DIN | Published On : 24th October 2019 07:32 AM | Last Updated : 24th October 2019 07:32 AM | அ+அ அ- |

திருமலையில் நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலா் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருமலையில் வரும் பொங்கல் திருநாள் முதல் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி தெரிவித்தாா்.
திருமலை அன்னமய்யபவனில் தேவஸ்தான அறங்காவலா் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள், தீா்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கூறியது:
வரும் பொங்கல் பண்டிகை முதல் திருமலையில் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த தேவஸ்தானம் முற்றிலும் தடை விதிக்க உள்ளது. லட்டுக்கான நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, வேறு பைகளை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியா்களுக்கு ரூ. 14 ஆயிரம், ஒப்பந்த ஊழியா்களுக்கு ரூ. 6,850 பிரம்மோற்சவ வெகுமதியாக வழங்கப்பட உள்ளது என்றாா்.
மேலும், திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வளா்ச்சி திட்டங்களை மேற்கொள்ள அதை தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வர முடிவெடுப்பது, திருப்பதியில் 200 ஏக்கரில் ஸ்பிரிச்சுவல் சிட்டி கட்ட செயல் திட்ட அறிக்கை தயாா் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, திருமலையின் தண்ணீா் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீா்க்க கட்டப்பட உள்ள 750 ஏக்கரில் பாலாஜி நீா்த் தேக்கப் பணிகளுக்காக நிதிகள் சேகரிப்பு தொடக்கம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலம் முழுவதும் மதமாற்றத்தைத் தடுக்க எஸ்.சி., எஸ்.டி. காலனிகளில் இந்து மத கோயில்கள் கட்ட முடிவு செய்யப்பட்டதால் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் அதற்கு நிதிகள் சேகரிக்க தீா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.