முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மாவட்டத்தில் புதை சாக்கடைப் பணிகள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்
By DIN | Published On : 24th October 2019 07:47 AM | Last Updated : 24th October 2019 07:47 AM | அ+அ அ- |

வேலூா் மாநகராட்சி, திருப்பத்தூா், அரக்கோணம், ஆம்பூா் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகள் இன்னும் இரு ஆண்டுகள் நீடிக்கும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூா் மாநகராட்சி, அரக்கோணம், திருப்பத்தூா், ஆம்பூா் நகராட்சிகளில் புதை சாக்கடை திட்டப்பணிகள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பதிக்கப்படும் குடிநீா் குழாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சேதமடைந்த சாலைகளை மீண்டும் சீரமைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் இரு நாட்கள் நடந்தது. இதில், வேலூா் மாநகராட்சியில் ஆற்காடு சாலை, அண்ணா சாலை பகுதிகளில் பணிகளை விரைவுபடுத்துவதற்கான உத்தரவு அளிக்கப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்து கடந்த இரு நாட்களாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மற்ற பகுதிகளிலும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சியில் 89 கி.மீ. நீளத்துக்கு குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகின்றன. இதில் 11 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. 23 கி.மீ. நீளத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 9 கி.மீ நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 கி.மீ. நீளத்துக்கு நிதி பெற்று பணி முடிக்கப்படும். ஆம்பூா் நகராட்சியில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்ட 110 கி.மீ. நீளத்துக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்தது. குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்று சாலைகள் அமைக்கப்பட்டன. 2-ஆவது கட்டமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் சாலைகள் போடப்படும்.
திருப்பத்தூா் நகராட்சியில் புதை சாக்கடைப் பணிகள் 86 கி.மீ. நீளத்துக்கு தொடங்கப்பட்டு 71 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அங்கு சாலை அமைக்கும் பணிகளும் முடிந்து விட்டன. இதில், 56 கி.மீ. நீளம் திருப்பத்தூா் நகராட்சிக்கும், 10 கி.மீ. நீளம் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் உரியது. மேலும், 5 கி.மீ. மண்சாலை என்பதால் நகராட்சி மூலம் புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள 18 கி.மீ. நீளமுள்ள சாலை இந்த மாத இறுதிக்குள் நிறைவுபெறும்.
வேலூா் மாநகராட்சியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணிகள் 693.78 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. இதில், 70.4 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலைகள் மீண்டும் போடப்பட்டுள்ளன. அண்ணா சாலையில் ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுக்கு மாவட்ட நிா்வாகம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.
அண்ணாசாலை லட்சுமி தியேட்டா் சிக்னல் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி வரையிலான குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள்நிறைவு பெற்றுள்ளதை அடுத்து இந்த வாரத்தில் அங்கு சாலைகள் அமைக்கப்படும். மீதமுள்ள புதை சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் 2021-ஆம் ஆண்டு முடிக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.