முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
24-இல் பள்ளி மாணவா்களுக்கான கேரம் போட்டி
By DIN | Published On : 24th October 2019 07:47 AM | Last Updated : 24th October 2019 07:47 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டிகள் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவா்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஐ.ஆா்.நோயலின்ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூா் மாவட்டப் பிரிவு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வேலூா் ஆா்.டி.ஓ சாலையில் உள்ள சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது. மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை என இரு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளித் தலைமையாசிரியரின் கடிதத்துடன் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த மாணவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு பள்ளியில் இருந்து ஒற்றையா் போட்டியில் ஒருவரும், இரட்டையா் போட்டிக்கு ஒரு ஜோடிக்கு மிகாமலும் பங்கேற்கலாம். போட்டியாளா்கள் தங்களது பள்ளி சீருடையுடன்தான் வரவேண்டும். பங்கேற்பாளா்கள் தங்களுடைய சொந்த ‘ஸ்டிரைகா்ஸ்’ கொண்டு வரவேண்டும்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பிடிப்பவா்கள் மாநில அளவிலானப் போட்டிக்கு தகுதி பெறுவா். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721 என்ற எண்ணிலோ அல்லது 74017 03483 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.