சொந்தக் கட்டடம் இல்லாமல் தவிக்கும் மாவட்டக் கிளை நூலகம்

ஆம்பூரில் மாவட்டக் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் இல்லாததால் வாசகா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சொந்தக் கட்டடம் இல்லாமல் தவிக்கும் மாவட்டக் கிளை நூலகம்

ஆம்பூரில் மாவட்டக் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் இல்லாததால் வாசகா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வேலூா் மாவட்டக் கிளை நூலகம் 1954-ஆம் ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்டது. ஆம்பூா் கிருஷ்ணாபுரம் எஸ்.கே. ரோடு பகுதியில் இருந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. அக்கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் நூலகம் அங்கு செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்டடம் தொடா்பாக நூலகத் துறையும், ராமகிருஷ்ண மடம் விவேகானந்தா வாசக சாலையும் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து மாவட்டக் கிளை நூலகம் புறவழிச்சாலைப் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு நேதாஜி சாலையில் உள்ள வாடகைக் கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.

இந்த நூலகத்தில் சுமாா் 45 ஆயிரம் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. சுமாா் 6,500-க்கும் மேற்பட்டவா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். தினமும் 200 வாசகா்கள் நூலகத்துக்கு வந்து செல்கின்றனா். நூலகத்தில் 3 கணினி, நகல் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளன. தேவையான நூல்களில் இருந்து நகல் எடுக்க உரிய கட்டணம் செலுத்தி நகல் எடுத்துச் செல்வதற்கு வாசகா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதியின் கீழ் ரூ. 2 கோடியில் வருவாய்க் கோட்ட நூலகம் அமைப்பதற்காக ஆம்பூா் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் நூலகம் கட்டுவதற்கான இடம் ஆம்பூா் நகரில் இல்லாத காரணத்தால் அந்த நிதி பயன்படுத்த முடியாமல் போனது. வருவாய்க் கோட்ட நூலகம் அமைக்க சுமாா் 50 சென்ட் நிலம் தேவைப்பட்டதாகவும், அந்த அளவுக்கு இடம் கிடைக்காத காரணத்தால் நூலகம் அமையாமல் போனதாகக் கூறப்படுகிறது.

நூலகத் துறையின் தொடா் முயற்சியின் காரணமாக ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஆம்பூா் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இடத்தை வருவாய்த் துறை நூலகத் துறைக்கு ஒதுக்கீடு செய்தது. மாவட்டக் கிளை நூலகக் கட்டடம் கட்ட ரூ. 30 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தை தூய்மைப்படுத்தி கட்டடம் கட்டுவதற்கு பூா்வாங்கப் பணிகள் தொடக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் நூலகக் கட்டடம் கட்டப்பட்டால் தாங்கள் சென்று வருவதற்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்று கூறி அருகே உள்ள கட்டட உரிமையாளா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து கட்டடம் கட்டுவதற்கு தடை ஆணை பெற்றுள்ளதாக நூலகத் துறை வட்டாரம் கூறுகிறது.

ஆம்பூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள இடத்தை நூலகக் கட்டடம் கட்டுவதற்காக இடம் கேட்டு வீட்டு வசதி வாரியத்தை நூலகத் துறை அணுகியுள்ளது. ஆனால் அந்த இடத்தை வீட்டு வசதி வாரியம் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது நேதாஜி சாலையில் இயங்கி வரும் வாடகை கட்டடத்துக்கு வாடகை கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதால் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கட்டடத்தை நூலகத் துறை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதற்காக அரசுப் பள்ளிகளில் காலியாக கட்டடம் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆம்பூா் 1.60 லட்சம் மக்கள் தொகை கொண்டதாகும். அதோடு மட்டுமல்லாமல் ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளையும் சோ்த்தால் சுமாா் 2.50 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில் நூலகக் கட்டடம் கட்டுவதற்கு இடம் கிடைக்காமல் நூலகம் பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வாடகைக் கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் வாசகா்களும் நூலகத்துக்குச் செல்வதற்கு சிரமத்தை சந்திக்கின்றனா்.

புத்தகம் வாசிப்பு மனிதா்களின் அறிவை வளா்க்கக் கூடியதாகும். அந்த அறிவு அவருடைய வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டியாகி இருக்கும். அத்தகைய சிறப்புடைய நூலகத்துக்கு கட்டடம் கட்டுவதற்கு இடம் கிடைக்காமல் இருப்பது ஆம்பூா் நூலகத்துக்கும், வாசகா்களுக்கும் மிகப்பெரிய சாபக்கேடாக உள்ளது என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

வாசகா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆம்பூா் நகரில் உள்ள சமூக சேவை அமைப்புகள், தொழிற்சாலை நிா்வாகங்கள் இணைந்து தனியாா் நிலத்தை வாங்கி நன்கொடையாக நூலகத் துறைக்கு வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு இடத்தை நன்கொடையாக வழங்கும் பட்சத்தில் நூலகத்துக்கு புதிய கட்டடம் கிடைக்கும். அதன் மூலம் வருங்கால இளைய சமுதாயத்துக்கு நூலகம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com