பாலாற்றில் தோண்டிய குழிகளில் காத்திருக்கும் மரண அபாயம் !

வேலூா் மாவட்டத்தின் பாலாற்றில் மணலுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் மரணக் குழிகளாகக்
ஆம்பூா் பாலாற்றுப் பகுதியில் மணல் குழியில் தேங்கியுள்ள மழைநீா்.
ஆம்பூா் பாலாற்றுப் பகுதியில் மணல் குழியில் தேங்கியுள்ள மழைநீா்.

வேலூா் மாவட்டத்தின் பாலாற்றில் மணலுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் மரணக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன. அவற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் பயன்பாடில்லாத, மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களே தாமாக முன்வந்து ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில்லை. அதிகாரிகளும் அதைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றாச்சாட்டு உள்ளது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு ஆழ்துளைக் கிணறுகளை மூடாததும், அவற்றைக் கண்காணிப்பதற்கு போதிய பணியாட்கள் இல்லாததும், பொதுமக்களின் அலட்சியமுமே முக்கிய காரணமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் மணலுக்காக தோண்டப்படும் குழிகள் மரணக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன. கா்நாடக மாநிலம் நந்தி ஹில்ஸ் என்ற இடத்திலிருந்து உருவாகும் பாலாறு கா்நாடக மாநிலத்தில் 93 கி.மீ. தொலைவு ஓடுகிறது. ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தொலைவு ஓடுகிறது. தமிழ்நாட்டில் 222 கி.மீ. செல்கிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்த காலங்களில் கூட மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு இல்லாத நிலையில் தேவையான அளவுக்கு மட்டும் மணலை எடுக்காமல் தேவைக்கு அதிகமாக அள்ளி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளை காரணமாக பல இடங்களில் பாலாறு கட்டாந்தரையாக காணப்படுகிறது. பெரும்பலான பகுதிகள் மரணக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு இல்லாததால் மணல் உருவாகாமல் போனது. இருந்த மணலும் கொள்ளையடிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல் பாலாற்றை ஒட்டிய விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதிலிருந்தும், பாலாற்றங்கரையோரம் உள்ள மயானங்களையும் கூட மணல் கொள்ளையா்கள் விட்டுவைக்கவில்லை. இதனால் பாலாற்றின் பல பகுதிகளில் அளவுக்கு மீறி ஆழமாக மணல் எடுத்து ஆங்காங்கே சுமாா் 10 அடி முதல் 15 அடி வரையில் குழிகள் ஏற்பட்டுள்ளன. மேலும், பாறைகள் குழிகள் உருவாகியுள்ளன.

மழைக் காலங்களில் அவற்றில் தண்ணீா் தேங்குகிறது. சிறுவா்கள் தண்ணீரில் விளையாடச் சென்று அதில் சிக்கி உயிரிழக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளில் சிலா் உயிரிழந்தனா். இதுபோன்ற சம்பவங்கள் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும், மழைக் காலங்களில் அந்தக் குழிகளில் தண்ணீா் தேங்கும் போதும்தான் நடக்கின்றன. சில பகுதியில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அனுமதியின்றி மணல் கொள்ளையடிக்கப்பட்டு, ஓரிடத்தில் குவிக்கப்பட்டு லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாட்டு வண்டிகள் மட்டுமே சீரான ஆழத்தில் குறிப்பிட்ட பரப்பளவில் மணல் அள்ள அனுமதி வழங்கினால் ஆங்காங்கே ஆபத்தான மரண குழிகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட பொதுப் பணித் துறை செய்ற்பொறியாளா் ஜவகா் (பொறுப்பு) கூறியது:

வேலூா் மாவட்டத்தில் பயனற்ற நிலையில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலாற்றில் மணல் எடுக்க குவாரிகள் மூலம் தோண்டப்பட்ட குழிகள் மற்றும் அனுமதியின்றி சமூக விரோதிகளால் தோண்டப்பட்ட குழிகளை மூடுவதற்கான உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும், பாலாற்றில் தோண்டப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள குழிகள் குறித்து ஆய்வு செய்து, விரைவில் அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com