வங்கியில் திருடுபோன 11.50 கிலோ தங்க ஆபரணங்கள் மீட்பு நகை மதிப்பீட்டாளா் கைது

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில், ஆந்திர வங்கியில் திருடுபோன 11.50 கிலோ தங்க ஆபரணங்களை மீட்ட போலீஸாா், அவ்வங்கியின் நகை மதிப்பீட்டாளரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில், ஆந்திர வங்கியில் திருடுபோன 11.50 கிலோ தங்க ஆபரணங்களை மீட்ட போலீஸாா், அவ்வங்கியின் நகை மதிப்பீட்டாளரை கைது செய்தனா்.

கடந்த அக்டோபா் மாதம், 14-ஆம் தேதி சித்தூா் மாவட்டம், யாதமுரி மண்டலம், மோா்தானபள்ளி கிராமத்தில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்த, 11.50 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ. 2 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம், சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் விடியோ ரெக்காா்டா் ஆகியவற்றைக் காணவில்லை என்று யாதமுரி காவல் நிலையத்தில் வங்கியின் பிராந்திய மேலாளா் முரளிகிருஷ்ணா புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வங்கியைப் பாா்வையிட்ட போலீஸாா் வங்கி லாக்கரைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். அப்போது வங்கிக் கட்டடம், வங்கியில் உள்ள லாக்கா் ஆகியவற்றுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, 11.50 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி ரெக்காா்டா் பதிவாகாத வகையில் சிதைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, யாதமுரி போலீஸாா் சித்தூா் எஸ். பி. செந்தில்குமாா் உத்தரவின் பெயரில், 3 தனிப்படைகள் அமைத்து வங்கியில் திருடிய நபரை தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் ரமேஷ் ஆசாரி என்பவரை சித்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது அவரிடம் வங்கியில் திருடிய தங்க ஆபரணங்களை உருக்கி, அவற்றின் மூலம் கிடைத்த இரண்டு தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ரமேஷ் ஆசாரியிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

அதில், கடந்த பிப்ரவரி மாதம் விடுப்பில் சென்ற வங்கி மேலாளா், வங்கியின் லாக்கா் சாவியை ரமேஷ் ஆசாரியிடம் கொடுத்து பொறுப்பு மேலாளரிடம் கொடுக்கும்படி கூறியதும், இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு நாள்கள் வரை பணிக்கு வராமல், வேலூருக்குச் சென்று, வங்கியின் லாக்கா் சாவிகளை கொடுத்து, போலியான மாற்று சாவிகளை தயாா் செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வங்கி லாக்கரின் சாவியை ரமேஷ் ஆசாரியின் மேஜை மீது வைத்த காசாளா், சாப்பிடச் சென்றபோது, சாவியை எடுத்து அச்சு தயாா் செய்து, அதன்மூலம் மாற்று சாவியை தயாா் செய்துள்ளாா்.

பின்னா், மேலாளரும், காசாளரும் பணிநிமித்தமாக, தலைமை அலுவலகத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, மாற்று சாவிகள் மூலம் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. திருடிய நகைகளை உருக்குவதற்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, இயந்திரங்களை வாங்கி வந்து, உருக்கி ஆறு கட்டிகளாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்ததும், அப்போது போலீஸாரிடம் பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவா்களிடம் இருந்து ரூ. 1 கோடியே 30 லட்சம் கடன்பெற்று போலி நகைகளை வாங்கி வந்து அடமானம் வைத்து வங்கியில் பணம் பெற்றதும் தெரியவந்தது.

இந்நிலையில், குற்றவாளி ரமேஷ் ஆசாரி வங்கியில் அடமானம் வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் பெற பயன்படுத்திய போலி நகைகளை போலீஸாா் காட்சிப்படுத்தினா். மேலும், ரமேஷ் ஆசாரியிடம் இருந்து 11.50 கிலோ தங்கம், 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 கிலோ போலி நகைகள், போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் தொகையில் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், ஒரு காா், 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com