இ-சேவை மைய ஊழியர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 10th September 2019 08:54 AM | Last Updated : 10th September 2019 08:54 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்வது தொடர்பாக வேலூரில் இ-சேவை மைய ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சிறப்பு மனுநீதி நாள் முகாம் போன்ற பல்வேறு கூட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு பயனாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மூலம் சுமார் 480 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்குவது, பதிவு செய்வது தொடர்பாக வேலூர் மாவட்ட இ-சேவை மைய ஊழியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூர் மாவட்ட இ-சேவை மேலாளர்கள் ஜெகநாதன், நிவேதிதா ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைக்கு இனிமேல் வேலூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேறு எங்கும் செல்லத் தேவையில்லை. விண்ணப்பிக்க வரும்போது ஒரு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை கொண்டுவர வேண்டும். விண்ணப்பிக்க ரூ. 10 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இடைத்தரகர்களை நம்பி பயனாளிகள் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்டம் முழுவதும் இருந்து இ-சேவை மைய ஊழியர்கள் பங்கேற்றனர்.