வாலாஜாப்பேட்டை - வானகரம் ஆறுவழிச்சாலை விரிவாக்கப்பணி தாமதம்: ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்  

வாலாஜாப்பேட்டையில் இருந்து வானகரம் வரைலும் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அவசர  உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் இருந்தும் அவற்றை இயக்காததால் விபத்து
வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே பழுதடைந்து பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம்.
வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே பழுதடைந்து பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம்.


வாலாஜாப்பேட்டையில் இருந்து வானகரம் வரைலும் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அவசர  உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் இருந்தும் அவற்றை இயக்காததால் விபத்து காலங்களில் உயிரிழப்பு  அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மும்பை- சென்னை நகரங்களை இணைக்கும் வகையில் 1,235 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-4 ) தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களின் வழியாகச் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை மகாராஷ்டிர மாநிலத்தில் 371 கி.மீ., கர்நாடகத்தில் 658 கி.மீ., ஆந்திரத்தில் 83  கி.மீ., தமிழகத்தில் 123 கி.மீ. என  மத்திய அரசின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை முக்கிய நகரங்களை மட்டுமின்றி புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களையும், பெரிய தொழிற்பேட்டைகளையும் இணைக்கிறது. 
இந்த தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியான வாலாஜாப்பேட்டை முதல் வானகரம்  வரையிலும் தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ளது. அதேசமயம், வாலாஜாபேட்டை முதல் கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது.  
முக்கியமான வாலாஜாப்பேட்டை-வானகரம் இடையே சாலை  நான்கு வழிச் சாலையாக உள்ளதால், பெருகிவரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி  வருகின்றனர். முக்கிய சந்திப்பான வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி வழியாக நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. 
இச்சாலையை  ஆறுவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில், இந்த நான்கு  வழிச்சாலையை,  ஆறுவழிச்சாலையாக  விரிவாக்கம் செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி பெங்களுரூவில் இருந்து ஆந்திர மாநிலம் வரை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நிறைவடைந்து விட்டது.
ஆனால், வாலாஜாப்பேட்டை - வானகரம் இடையே ஆறு வழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்றுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்து தொடங்கப்பட்ட இந்த சாலை அமைக்கும் பணி, ஆமை  வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாலை விரிவாக்கத்தை காரணம் கூறி வாலாஜாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதுôர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம்  உயர்த்தி வசூலித்து வருகின்றனர். 
ஆனால், நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக  விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் வாலாஜாவில் தொடங்கி வானகரம் வரை சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி  தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பலமுறை புகார் தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில் வாலாஜாப்பேட்டையில் இருந்து வானகரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மீட்பு வாகனம் இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் இயங்காததால் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை  மீட்க 108 ஆம்புலன்ஸ் தான் வந்தாக வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, உயிருக்கு போராடுபவர்களை மீட்டு, உடனடியாக கொண்டு செல்லும் நேரம் விரயமாகி கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் உயிர்  காக்கும் நேரம் தவறி விடுவதால்,  உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலர் உயிரிழந்து விடுகின்றனர். 
இதனை தடுக்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: 
வாலாஜாப்பேட்டையில் இருந்து  வானகரம் வரை ஆறுவழிச்சாலை அமைக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் சுமார் 8 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. 
இந்த பணிகள் நிறைவடையும் பட்சத்தில், அவசரத் தகவல் தொடர்பு  சாதனம் (எஸ்.ஓ.எஸ்.) ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம், வாகன நிறுத்துமிடம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com