பாதுகாப்பற்ற நிலையில் ஆட்டோக்களில் பள்ளிக் குழந்தைகள் பயணம்: விழுப்புரத்தை பின்பற்றுமா வேலூர்?

பாதுகாப்பற்ற நிலையில் ஆட்டோக்களில் பள்ளிக் குழந்தைகள் பயணம்: விழுப்புரத்தை பின்பற்றுமா வேலூர்?

வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்

வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையிலேயே பயணம் செய்யும் நிலைமை நீடித்து வருகிறது. இதனால், ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் விடுக்கும் உத்தரவுகளை வேலூர் மாவட்டத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 650 பள்ளிகளில் பாதிக்கும் அதிகமாக தனியார் பள்ளிகள் உள்ளன. மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர பெரும்பாலும் அந்தந்த பள்ளிகள் சார்பிலேயே சிற்றுந்துகள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களைப் பயன்படுத்தாத மாணவ, மாணவிகள் சொந்த வாகனங்களில் மட்டுமின்றி ஆட்டோக்களிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மாதக் கட்டண அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. 
இதில், பெரும்பாலான ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கூடுதல் லாபம் பெறும் நோக்கில் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இதனால், பல சமயங்களில் ஆட்டோக்களுடன் அவற்றில் பயணிக்கும் மாணவர்களும் ஆபத்துகளில் சிக்குவது வழக்கம். 
காட்பாடி-குடியாத்தம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த கீழ்வடுகன்குட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் மதுலேகா (12) செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அந்த ஆட்டோவில் விதிமுறைக்குப் புறம்பாக 6 மாணவர்கள் ஏற்றப்பட்டிருந்ததுடன், மதுலேகா ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கீழ்வடுகன்குட்டை அருகே ஆட்டோ பள்ளத்தில் ஏறிஇறங்கியபோது மதுலேகா திடீரென சாலையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதுலேகா புதன்கிழமை உயிரிழந்தார். 
இந்த விபத்தைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சரவணன் காட்பாடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றதாக 11 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், இத்தகைய நடவடிக்கைகள் விபத்து நடந்த ஓரிரு நாள்களில் மட்டும் மேற்கொள்ளப்படும் என்றும், அதன்பிறகு மீண்டும் அளவுக்கு அதிகமாக குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவது வாடிக்கையாகிவிடும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். 
இப்பிரச்னைக்கு விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்பற்றும் உத்தரவுகளை வேலூர் மாவட்டமும் பின்பற்றுவது தீர்வாக அமையலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விழுப்புரத்தில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் இடதுபுறம் கம்பியும், வலதுபுறம் கதவும் கட்டாயமாக வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கதவு வைக்காமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கட்டாயமாக கதவு வைக்க அறிவுறுத்தப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தெரிவித்துள்ளார். 
இதனால், விழுப்புரத்தில் ஆட்டோக்களில் செல்லும் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பான நிலையில் பயணிப்பதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், இந்த உத்தரவுகளை வேலூர் மாவட்டத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியது:
மோட்டார் வாகனச் சட்டப்படி ஆட்டோக்களில் ஓட்டுநரைத் தவிர்த்து அதிகபட்சம் 3 பேரும், ஷேர் ஆட்டோக்களில் ஓட்டுநரைத் தவிர்த்து அதிகபட்சம் 5 பேரும் அழைத்துச் செல்லப்படலாம். இது பள்ளிக் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால், சிறுவர்கள் என்பதால் ஆட்டோக்களில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். போக்குவரத்து அலுவலர், போலீஸார் இதை அவ்வப்போது ஆய்வு செய்து தடுத்தாலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த விதிமீறல்களை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. 
இப்பிரச்னைக்கு விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்பற்றும் உத்தரவுகள் தீர்வு இருக்கும். இதுதொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதைத் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலருடன் கலந்துபேசி அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com