முருகனை சந்திக்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு

கணவர் முருகனை சந்திக்கக் கோரி நளினி அளித்த மனுவை வேலூர் சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.

கணவர் முருகனை சந்திக்கக் கோரி நளினி அளித்த மனுவை வேலூர் சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் தமிழக சிறைகளில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, அவரது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாட்டுக்காக ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்னர், இந்த பரோல் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். அவரது பரோல் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே, நளினியின் கணவர் முருகனும் தனது மகள் திருமணத்துக்காக ஒரு மாத காலம் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், அந்த மனுவை சிறைத் துறை நிராகரித்துள்ளது. 
இந்நிலையில், பரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனைச் சந்திக்க வேண்டும் எனக் கோரி செவ்வாய்க்கிழமை மனு அளித்திருந்தார். அதை சிறைத் துறை நிர்வாகம் வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முருகன், நளினி சந்திப்பு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்க வேண்டும். அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் முருகன், நளினி சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு முடிந்து 14 நாள்கள் மட்டுமே ஆகியுள்ளது. இதன்காரணமாக, இவர்கள் சந்திப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 15-ஆம் தேதியுடன் நளினி பரோலில் முடிந்து சிறைக்கு திரும்பிவிடுவார். முருகன் விரும்பினால் அடுத்த சனிக்கிழமை நளினியைச் சந்திக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com