வன விலங்குகளின் தாகம் தீர்க்கும்நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அம்மூர் காப்புக் காட்டில்  வன விலங்குகளின் தாகம் தீர்க்கும்  நீர் நிலைகளுக்கு, நீர் வரத்து அதிகரித்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வன விலங்குகளின் தாகம் தீர்க்கும்நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அம்மூர் காப்புக் காட்டில்  வன விலங்குகளின் தாகம் தீர்க்கும்  நீர் நிலைகளுக்கு, நீர் வரத்து அதிகரித்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டையில்  உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூர், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூர் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பசுமை மாறாக் காடுகளில் விலையுயர்ந்த அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதில் 2,273  ஹெக்டர் பரப்பளவு கொண்ட அம்மூர் காப்புக்காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் ஒன்றான புள்ளி மான்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  

கடந்த சில மாதங்களாக இந்த வனப்பகுதியில் போதிய மழையில்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு காப்புக்காட்டை சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனது. 

இதன் காரணமாக, காப்புக்காட்டில் வசித்து வரும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு  வரத்தொடங்கின. 

இதுபோன்ற தருணங்களில், அரியவகை  மான்  விவசாய கிணற்றில் தவறி விழுந்தும், வாகனங்களில் சிக்கியும், நாய்களால் கடிபட்டு இறந்து போகும் நிலை ஏற்பட்டது. 

இதனால் கவலையடைந்த வனவிலங்கு ஆர்வலர்கள் தண்ணீர்த் தேடி அலையும் மான்களுக்கு வனத்துறை சார்பில் தொட்டிகளில் தண்ணீர்  நிரப்பி வைக்க ஏற்பாடு  செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் வனத்துறையினரும் ஓரிரு முறை தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வந்தனர். இருப்பினும், மான்கள் காப்புக்காட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

இந்நிலையில், வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அம்மூர் காப்புக்காட்டை சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, அங்குள்ள தடுப்பணை, ஏரி, குட்டைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், காய்ந்து போன பசும் புல்வெளிகளும் பசுமை நிலைக்கு திரும்பியது. 

இதன்காரணமாக, அம்மூர் காப்புக் காட்டில் வசித்து வரும் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் தண்ணீர் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 

எனவே, காட்டை விட்டு மான்கள் வெளியேறுவதும் குறைந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேசமயம், காப்புக்காட்டில் வசிக்கும் வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டும், தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளைத் தூர் வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

மேலும் பல புதிய நீர்நிலைகளை வனப்பகுதியிலி உருவாக்க தமிழக அரசும், மாவட்ட வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், வனவிலங்கு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com