ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு புதிய சிறப்பு அதிகாரிகள் பொறுப்பேற்பு

இரண்டு மாதத்துக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லைகள்

இரண்டு மாதத்துக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு பணிகள் இறுதி செய்யப்படும் என புதிதாக நியமிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி புதன்கிழமை தெரிவித்தார். 
தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா உரையில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை புதிய மாவட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக  இருந்த   திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. 
இதையடுத்து ராணிப்பேட்டை புதிய மாவட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக திவ்யதர்ஷினி முறைப்படி கோப்புகளில் கையொப்பமிட்டு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, வாலாஜா சுங்கச் சாவடியில் அவருக்கு  ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் க. இளம் பகவத், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 
பொறுப்பேற்ற பின் சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி ராணிப்பேட்டை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது: 
ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான தற்காலிக இடம் உடனடியாக ஆய்வு செய்து சிறப்புக் கூட்டம் நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பிறகு அரசு உத்தரவின் பேரில், நிரந்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடம் ஆய்வு செய்து கண்டறியப்பட உள்ளது. மேலும் இரண்டு மாத காலத்துக்குள் முறையாக ஆய்வு செய்து மாவட்ட எல்லை வரையறை பணிகள் இறுதி செய்யப்படும் என்றார்.
திருப்பத்தூர் 
திருப்பத்தூர் புதிய மாவட்டத்துக்கான தனிஅலுவலராக ம.ப.சிவனருள், புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 
புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கேட்டறியப்பட்ட நிலையில்,  அதன்தொடர்ச்சியாக, திருப்பத்தூர் புதிய மாவட்டத்துக்கான தனிஅலுவலராக ம.ப.சிவனருள் நியமிக்கப்பட்டுள்ளார். 
சென்னையில் இருந்தபடி புதன்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கூட்டுறவுத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், பின்னர் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 
தருமபுரி சார்- ஆட்சியராக பணியாற்றி வந்த சிவனருள், தற்போது திருப்பத்தூர் புதிய மாவட்டத்துக்கான தனி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com