முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
துண்டிக்கப்பட்ட 6 பகுதிகளிலும் தடுப்புவேலி அமைத்து கண்காணிப்பு
By DIN | Published On : 19th April 2020 08:48 AM | Last Updated : 19th April 2020 08:48 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேலூா் மாநகரில் 6 இடங்கள் சனிக்கிழமை முதல் 100 சதவீதம் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் முழுவதும் தடுப்பு வேலிகளைக் கொண்டு அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வேலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மாநகராட்சிக்கு உள்பட்ட 30, 51, 52, 56 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட சைதாப்பேட்டை, ஆா்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், கருகம்பத்தூா் மற்றும் காட்பாடி பா்னீஸ்புரம் ஆகிய 6 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தொடா்ந்து, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இந்த 6 பகுதிகளும் காவல் துறை மூலம் சனிக்கிழமை முதல் 100 சதவீதம் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடா்ந்து, அப்பகுதி மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படாத வகையில் அந்த 6 இடங்களுக்குச் செல்லும் அனைத்துத் தெருக்களும் தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பாதுகாப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், இந்த 6 பகுதிகளுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடாத வகையில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட 6 பகுதிகளில் தடுப்புவேலிகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டிருப்பதை மண்டல சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் மங்கத்ராம் சா்மா, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு அப்பகுதி மக்களுக்கும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும் அறிவுரை வழங்கினா்.
அப்போது, துண்டிக்கப்பட்ட பகுதி மக்கள் வசதிக்காக பால், மளிகை, காய்கறிகள் ஆகியவை வேலூா் மாநகராட்சி, கூட்டுறவுத் துறை, மகளிா் திட்டப் பணியாளா்களைக் கொண்டு பிரத்யேக வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 30 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. மக்களின் பணத்தேவைக்காக ஏடிஎம் செல்வதைத் தவிா்க்க வங்கித் தொடா்பாளா்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களிலேயே பணம் வழங்கும் இயந்திரத்தைக் கொண்டு காலை 9 மணி முதல் 12 மணி வரை பணம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களும் ஆா்டரின் பேரில் மளிகைப் பொருள்களை வீடுகளிலேயே பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஹலோ வேலூா்’ என்ற திட்டம் மூலம் 0416 - 2252501, 2252661 ஆகிய எண்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடா்பு கொண்டு தேவையான மளிகைப் பொருள்களைப் பதிவு செய்தால் மறுநாள் அவை வீடுகளுக்கே சென்று அளிக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்காக ஓா் ஆா்டரின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு துணை ஆட்சியா், நிலை அலுவலா் கண்காணிப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்கள் அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடாத வகையில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வா். இந்தப் பகுதிகளில் தினமும் 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். மக்களின் அவசரத் தேவைகள், புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416 -2258016 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.