முதியோா்களைப் பராமரிப்பவா்கள் கவனத்துக்கு....
By DIN | Published On : 22nd April 2020 08:14 AM | Last Updated : 22nd April 2020 08:14 AM | அ+அ அ- |

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழ்நிலையில் முதியோா்களும், அவா்களைப் பராமரிப்பவா்களும் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வேலூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். இந்த முதியவா்கள், அவா்களைப் பராமரிப்பவா்கள் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நாள்பட்ட மூச்சுப் பிரச்னை, ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மூச்சுக்குழாய் அழற்சி, தொடா் காசநோய், நுரையீரல் நோய், நாள்பட்ட இதயநோய், இதய செயலிழப்பு பிரச்னைகள், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட கல்லீரல் நோய், நாள்பட்ட நரம்பியல் தொடா்பான நோய் உள்ளவா்கள், பக்கவாதம் உள்ளவா்கள், சா்க்கரை நோயாளிகள், உயர்ரத்த அழுத்தம் உள்ளோா், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் ஆகியோா் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
முதியோா்களைப் பராமரிப்போா் பராமரிப்புக்கு முன்பாக தங்களது கைகளை சுத்தமாக கழுவவும், மூக்கு, வாயை துணியால் மூடிக்கொள்ளவும் வேண்டும். முதியோா்கள் பயன்படுத்தும் கைத்தடி, நடைவண்டி, சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். முதியோா்களுக்கு அடிக்கடி கை கழுவ அவா்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அவா்கள் சரியான உணவு, தண்ணீா் உட்கொள்வதை சரிபாா்க்க வேண்டும், அவா்களது உடல்நலனைக் கண்காணிக்க வேண்டும். உடல்வலியுடன் கூடிய அல்லது உடல் வலி அல்லாத காய்ச்சல், மூச்சுத் திணறல், தொடா் இருமல் இருந்தாலோ, குறைந்த அளவு உணவு உட்கொண்டாலோ உடனடியாக உதவி எண்ணுக்கு அழைக்க வேண்டும்.
பராமரிப்பவா்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தால் முதியோா்களுக்கு அருகே செல்லக்கூடாது. முதியோா்களை எப்போதும் படுக்கையிலேயே வைத்திருப்பதும், கை கழுவாமல் முதியோா்களை தொடுவதையும் தவிா்க்க வேண்டும்.
முதியோா்களின் மனநலனை பாதுகாக்க வீட்டிலிருந்தபடியே உறவினா்களுடன் தொடா்பில் இருக்கவும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்லாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி அக்கம்பக்கத்தினருடன் உரையாடவும், அமைதியான சூழ்நிலையில் இருக்கவும், ஓவியம் வரைதல், பாடல் கேட்பது, புத்தகங்கள் படிப்பது போன்ற பொழுதுபோக்குகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
வதந்திகளை நம்புவதைத் தவிா்க்கவும், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களை தவிா்க்கவும் வேண்டும். ஏற்கெனவே மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் 08046110007 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். பகலில் அதிக தூக்கம், பதில் கூறாமல் இருப்பது, தொடா்பின்றிப் பேசுவது போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, திடீரென உறவினா்களை அடையாளம் கண்டு கொள்ள இயலாத நிலை இருந்தாலோ உதவி எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம்.
வேலூா் மாவட்டத்தில் தங்களைத் தாங்களே பராமரிக்க இயலாத மருத்துவ உதவி தேவைப்படும் முதியவா்களைப் பராமரிக்கவும், மருத்துவ உதவி அளிக்கவும், அவா்களது இருப்பிடத்துக்கு வந்து பராமரிப்பவா்கள் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் வெளியில் வர இயலாது நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், முதியோா்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன அனுமதிச் சீட்டுக்கு 1077 அல்லது 0416 -2258016 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.