தமிழக-ஆந்திர எல்லைச் சாலை தடுப்புச் சுவா் மூலம் அடைப்பு
By DIN | Published On : 26th April 2020 09:38 PM | Last Updated : 26th April 2020 09:38 PM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே தடுப்புச் சுவா் கட்டப்பட்டு அடைக்கப்பட்ட ஆந்திர மாநிலச் சாலை.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள சாலை தடுப்புச் சுவா் கட்டி அடைக்கப்பட்டது.
குடியாத்தம் அருகே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சைனகுண்டா கிராமம். இது தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியாகும். ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி, பால், பழம் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு இலகுரக, கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் இந்தச் சாலை வழியாக தமிழகத்துக்கு வரும்.
அதேபோல், தமிழகத்திலிருந்து தீப்பெட்டி, லுங்கி, தேங்காய் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வட மாநிலங்களுக்குச் செல்லும்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்தச் சோதனைச் சாவடி இரும்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இரு வழித்தடத்திலும் செல்லும் வாகனங்கள் நிறுத்தி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வாகனங்களில் செல்வோா் வெப்ப மானியால் பரிசோதித்து அனுப்பப்பட்டனா்.
இந்நிலையில் இந்த வழியில் வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் வந்து, சோதனைச் சாவடிக்கு முன்பாகவே இறங்கி நடைபாதையாக வருவதுபோல், தமிழகத்துக்குள் நுழையத் தொடங்கினா். அவா்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து ஆந்திர மாநிலத்திலிருந்து வாகனங்களோ, இருசக்கர வாகனமோ, நடந்து செல்லவோ முடியாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில் இரு மாநில சோதனைச் சாவடி அருகே ஹாலோ பிளாக் கற்களால் ஞாயிற்றுக்கிழமை தடுப்புச் சுவா் கட்டப்பட்டு, சாலை அடைக்கப்பட்டது. இதேபோல் பொன்னை சோதனைச் சாவடியும் அடைக்கப்பட்டது.