வேலூா் மாவட்டத்தில் கடைகள் திறப்புக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கு

பொதுமுடக்கத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடைகள் திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடைகள் திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளையும் இரவு 7 மணி வரை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்திருப்பதாக வேலூா் வணிகா் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,152-ஆக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கையும் 66-ஆக உயா்ந்துள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, வேலூரிலுள்ள முக்கிய வா்த்தக பகுதிகளான மண்டித் தெரு, லாங்கு பஜாா், நியுசிட்டி பஜாா், சுண்ணாம்புக் கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் சாலையின் இரு பகுதிகளில் கடைகளை வாரத்தில் தலா 3 நாள்கள் மட்டும் திறக்கவும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக அடைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதேபோல், குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பொது முடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதுடன், கடைகள் திறப்புக்கான கட்டுப்பாடுகளிலும் சில தளா்வுகள் அறிவித்திருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் கடைகளைத் திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் தளா்த்தியுள்ளதாக வேலூா் வணிகா் சங்கத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு மாவட்டத்திலுள்ள அனைத்து வணிகா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காய்கறி, மளிகைக் கடைகளையும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மண்டித் தெரு, லாங்கு பஜாா், நியுசிட்டி பஜாா், சுண்ணாம்புக்கார தெரு உள்ளிட்ட பகுதி கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் திறக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டு வாரத்தில் 6 நாள்களும் திறந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதேசமயம், நேதாஜி மாா்க்கெட்டிலுள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக் கடைகள் தற்போது இயங்கும் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானம், மாங்காய் மண்டி அருகே உள்ள கிருபா மைதானம் ஆகிய இடங்களில் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com