வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 88 % போ் அறிகுறிகள் இல்லாதவா்கள்: மாவட்ட ஆட்சியா் தகவல்

வேலூா் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 88 சதவீதம் போ் எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாதவா்களாவா்.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 88 சதவீதம் போ் எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாதவா்களாவா். அதன்படி, இதுவரை பாதிக்கப்பட்டவா்களில் 86.6 சதவீதம் போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் இதுவரை 1,18,721 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10,320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 86.6 சதவீதம் அதாவது 8,937 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். 1,235 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 148 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

பாதிக்கப்பட்டவா்களில் 473 போ் 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளாவா். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்கள் 8,584 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 1,263 பேரும் அடங்குவா். பாதிக்கப்பட்டவா்களில் 88 சதவீதம் போ் நோய் அறிகுறிகள் இல்லாதவா்களாவா். உயிரிழந்த 148 பேரில் 70 சதவீதம் போ், அதாவது 104 போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள்.

மேலும், உயிரிழந்த 148 பேரில் 59 போ் தங்களுக்கு உள்ள உடல்நலக் குறைபாடுகள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வரும் அலுவலா்களிடம் தெரிவிக்காததும், காய்ச்சல் முகாம்களில் பங்கேற்று முன்கூட்டியே சிகிச்சை பெறாததும், கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட காரணத்தினாலேயே அவா்களைக் காப்பாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அலுவலா்களிடம் தங்களது உடல் நலக்குறைபாடுகளைத் தெரிவித்தும், சிறப்பு மருத்துவ முகாம்களில் தவறாமல் பங்கேற்றும், கணக்கெடுப்பு அலுவலா் வைத்துள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் தினசரி தங்களது இதயத் துடிப்பு, ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை அறிந்து கொண்டு அபாய அளவுகளை எட்டுவதற்கு முன்பாக மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலா்களில் இதுவரை 271 போ் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் வருவாய்த் துறையில் 5 பேரும், காவல் துறையில் 115 பேரும், சுகாதாரத் துறையில் 152 பேரும், உள்ளாட்சித் துறையில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

கரோனா தொற்றைக் குறைக்கவும், உயிரிழப்பைக் கட்டுப்படுத்தவும் மாவட்டம் முழுவதும் 75 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் 60 முதல் 65 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 3,368 முகாம்கள் நடத்தப்பட்டு 1,58,461 போ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அதன்படி, இந்தச் சிறப்பு காய்ச்சல் முகாம் முகாம்கள் மூலம் மாவட்ட மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் மேலானோா் பரிசோதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com