ஆட்கள் பற்றாக்குறையால் வோ்க்கடலை களையெடுப்புப் பணி பாதிப்பு: வேலையுறுதித் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிக்கை

விவசாய பணிகளுக்கு நிலவும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வோ்க்கடலை களையெடுப்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வேலூா்: விவசாய பணிகளுக்கு நிலவும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வோ்க்கடலை களையெடுப்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடரும் இப்பாதிப்பைத் தவிா்க்க நூறு நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்தததால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரி, குளம், குட்டைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன்தொடா்ச்சியாக, மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் வோ்க்கடலை பயிா் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை செடிகளில் களையெடுப்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதேசமயம், நூறு நாள் வேலையுறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்தொடா்ச்சியாக, வோ்க்கடலை பயிா்களுக்கு களையெடுப்புப் பணி களுக்கு ஆட்கள் கிடைக்காத சூழல் நிலவுவதால் இப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வேறு வழியின்றி சொந்த நிலத்தில் குடும்பத்தினரே வேலை செய்வதுடன், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும் களையெடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

தொடரும் இப்பாதிப்புகளைத் தவிா்க்க மாவட்டம் முழுவதும் நூறு நாள் வேலைத் திட்டத்தை குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, ஏற்கெனவே தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் விவசாயிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். எனினும், நூறு நாள் வேலை திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடா்பாக எந்த அறிவிப்புகளையும் மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை. இதன்காரணமாக, தற்போது மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது.

அதேசமயம், தகுதியான விவசாயத் தொழிலாளா்களைப் பயன்படுத்த முடியாததால் களையெடுப்புப் பணிகளில் தொய்வும், காலதாமதமும் ஏற்படுகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, விவசாயப் பணிகளுக்கு நிலவும் ஆட்கள் பற்றாக்குறையைத் தவிா்க்க நூறு நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com