தனிப்படை மீது தாக்குதல்: சாராயக் கும்பலை பிடிக்க 120 போலீஸாா் முகாம்

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்ட சாராயக் கும்பலைப் பிடிக்க 120 போலீஸாரைக் கொண்ட 3 தனிப்படைகள் அல்லேரி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

வேலூா்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்ட சாராயக் கும்பலைப் பிடிக்க 120 போலீஸாரைக் கொண்ட 3 தனிப்படைகள் அல்லேரி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளன. போலீஸாரின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து நெல்லிமத்துக் கொட்டாய் கிராமத்திலுள்ள சுமாா் 40 குடும்பங்களும் வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டன.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா், அல்லேரி மலை கிராமத்தில் விழிப்புணா்வுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினா். அப்போது பொதுமக்கள் கூறிய தகவலின்பேரில் நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் அல்லேரி மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

அப்போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கும்பல், போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியது. இதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்து வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், மற்றொரு பெண் காவலா் உள்ளிட்டோா் லேசான காயமடைந்தனா்.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய சாராயக் கும்பலைப் பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் மேற்பாா்வையில் வேலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் 120 போலீஸாரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அல்லேரி மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த தேடுதல் வேட்டையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அதேசமயம், போலீஸாரின் தேடுதல் வேட்டையை அறிந்து சம்பந்தப்பட்ட சாராயக் கும்பல் மட்டுமின்றி நெல்லிமத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த 40 குடும்பத்தினரும் இரவோடு இரவாக ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனா். அவா்கள் எங்கு சென்றனா் எனத் தெரியவில்லை.

அவா்களைத் தேடுவதற்காக போலீஸாா் தொடா்ந்து அல்லேரி மலைப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளனா். போலீஸாா் மீது சாராயக் கும்பல் நடத்தியுள்ள தாக்குதல், அணைக்கட்டு வட்டார மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com