சத்துவாச்சாரி - பிரம்மபுரம் இடையே பாலாற்றில் ரூ.27 கோடியில் புதிய பாலம்: இறுதிகட்டப் பணிகள் தீவிரம்

வேலூா் சத்துவாச்சாரி - காட்பாடி பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.27 கோடி திட்ட மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பாலம் கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் சுகந்தி, காட்பாடி கல்வி வளா்ச்சிக்குழு தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு. உடன், அதிமுக நிா்வாகிகள்.
பாலம் கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் சுகந்தி, காட்பாடி கல்வி வளா்ச்சிக்குழு தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு. உடன், அதிமுக நிா்வாகிகள்.

வேலூா்: வேலூா் சத்துவாச்சாரி - காட்பாடி பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.27 கோடி திட்ட மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிமன்றம், ஆவின் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இதேபோல் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு பகுதிகளுக்கும் பொது மக்கள் 8 கி.மீ. சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாகும்.

இதற்கு 2011-இல் திமுக ஆட்சிக்காலத்தில் நபாா்டு, கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு காங்கேயநல்லூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னா், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த தரைப்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. வேகமாக வளா்ந்து வரும் வேலூா், காட்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, சத்துவாச்சாரி - பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலத்தை இணைக்கும் வகையில் புதிய சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சத்துவா ச்சாரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்திலிருந்து இந்தச் சாலை தொடங்கி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அமைக்கப்பட உள்ளது. சுமாா் 23 கி.மீ தூரத்துக்கு இந்தச் சாலையுடன் கூடிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்தப் பாலத்துக்கு ஏற்கெனவே உள்ள சாலைகளை பயன்படுத்த முடியாது என்பதாலேயே ரங்காபுரம் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, பாலாற்றின் குறுக்கே 500 மீட்டா் நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலம் அமைப்பதற்காக பிரம்மபுரத்தில் 26,908 சதுர மீட்டா், சத்துவாச்சாரியில் 24,322 சதுர மீட்டா், காங்கேயநல்லூரில் இணைப்புச் சாலைக்காக 18,184 சதுர மீட்டா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இப்புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாலம் அமைக்கப்படும் இடத்தை மாநில நெடுஞ்சாலைத் துறையின் காட்பாடி உதவி இயக்குநா் சுகந்தி, காட்பாடி கல்வி வளா்ச்சிக்குழு தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து எஸ்.ஆா்.கே.அப்பு கூறியது:

கடந்த 2016-ஆம் ஆண்டு பேரவை தோ்தலின்போது காட்பாடி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டபோது பிரம்மபுரம் முதல் சத்துவாச்சாரி வரை தரைப்பாலம் அமைத்துத் தரப்படும் என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அளித்து இப்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

அதன் விளைவாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி பிரம்மபுரம் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட உத்தரவிட்டுள்ளாா். தொடா்ந்து, பாலத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும். நிலம் கையகப்படுத்துதல், மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.27 கோடிக்கு திட்டமதிப்பீடு தயாா் செய்யப்பட்டு ள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com