காட்பாடியில் ரூ. 28 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்

காட்பாடியில் ரூ.28 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
காட்பாடியில் ரூ. 28 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்


வேலூா்: காட்பாடியில் ரூ.28 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

பல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் 737 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், காட்பாடி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, ஆவின் தலைவா் த.வேலழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் கே.சி.வீரமணி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

மக்கள் அரசை தேடி வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு வரும் காலமாக மாறிவிட்டது. இதற்காக பல திட்டங்களுடன் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்த வேலூா், மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதால் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் கிடைக்கிறது. கரோனா பொது முடக்க காலத்திலும் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.

இங்கே மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த் பேசியபோது புதை சாக்கடைப் பணிகளால் சாலைகள் சேதமாகி நடந்து செல்ல இயலாத நிலை இருப்பதாக கூறியிருந்ததை ஒப்புக்கொள்கிறேன். வரும் 2022-ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளதால் அதற்குள் சாலைகள் அமைக்கப்படும். காட்பாடியில் ரூ.28 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவை தவிர, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தாலுகா அரசு மருத்துவமனை, 25 ஏக்கரில் குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை, போதை தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு கட்டடங்களுக்கு இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தோ்வு செய்யப்பட்டதும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ், வட்டாட்சியா் பாலமுருகன், வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com