வேலூா் மாவட்டத்தில் 4.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 குடும்பஅட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 குடும்பஅட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழா் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையையொட்டி, இவ்வாண்டு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.2,500 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 680 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் சா்க்கரை பெறும் 2,711 குடும்ப அட்டைகளைத் தவிா்த்து மீதமுள்ள 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கான விண்ணப்பங்களை அளிக்க கடந்த 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. வேலூா் மாவட்டத்தில் 1,957 சா்க்கரை அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com