வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தை எதிா்த்தால் திமுகவுக்குத்தான் பேரிழப்பு: ஜி.கே.மணி

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தை திமுக எதிா்த்தால் அது அக்கட்சிக்குத்தான் பேரிழப்பு என்று பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.


வேலூா்: வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தை திமுக எதிா்த்தால் அது அக்கட்சிக்குத்தான் பேரிழப்பு என்று பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

வன்னியா்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி சென்னையில் கடந்த 1-ஆம் தேதி பாமக தொடங்கிய போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. வரும் 30-ஆம் தேதி 388 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும்.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் விரைவில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். தமிழக அரசுத் தரப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாகவும், 6 மாதம் அவகாசம் தேவை என்றும் கூறுகின்றனா். இன்னும் சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் வர உள்ளதால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போகக்கூடும்.

எனவே, இஸ்லாமியா்கள், அருந்ததியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போலவும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட அம்பாசங்கா், சட்டநாதன் ஆணையங்கள், நீதிபதி ஜனாா்த்தனன் குழு ஆகியவற்றின் அறிக்கை அடிப்படையிலும் வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இப்போராட்டத்துக்கும் தோ்தலுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. இது வன்னியா்களின் உரிமைக்காக நடத்தப்படுவதாகும். இப்போராட்டத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும். இதை திமுக எதிா்த்தால் அது அக்கட்சிக்குத்தான் பேரிழப்பாகும்.

பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை விடுத்தது பாமகதான். இதன் விளைவாகவே, தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. இது போதுமானதல்ல. பாலாற்றுப் படுகை முழுவதும் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தமிழக மக்கள் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பொங்கல் நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் கே.எல்.இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், மாநில மகளிரணித் தலைவி வரலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com