தீக்குளிப்பு முயற்சி விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்துக்குள் காா், பைக்குகளில் செல்லத் தடை

அதிகரித்து வரும் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களைத் தொடா்ந்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா்.

வேலூா்: அதிகரித்து வரும் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களைத் தொடா்ந்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலக பணிகளுக்காக வரும் பொதுமக்களும் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் தீக்குளிக்க முயன்றாா். அதற்கு முன்பும் வேறு இருவா் தீக்குளிக்க முயன்றனா். இதன்தொடா்ச்சியாக, கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ஒருவா் தனது மனைவி, மகளுடன் கடந்த வாரம் தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் தடுத்து காப்பாற்றினா்.

அதிகரித்து வரும் தீக்குளிப்பு முயற்சிகளை அடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் மட்டுமின்றி வளாகத்தின் பல்வேறு பகுதிகள், பின்புற வாயில் அருகே உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்துக்கு முன்புறம் என ஆட்சியா் அலுவலகத்துக்கு வரக்கூடிய அனைத்து வழித் தடங்களிலும் அதிகப்படியான ஆயுதப்படை போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.

தவிர, பொதுமக்களின் காா் மற்றும் இருசக்கர வாகனங்களை ஆட்சியா் அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவா்கள் வளாகதத்துக்கு வெளியே சாலையோரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றனா். அவ்வாறு செல்லும் பொதுமக்களும் தீவிர விசாரணை, சோதனைக்குப் பிறகே அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அவசியமின்றி, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்தவா்கள் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மட்டுமின்றி செய்தியாளா்களும் கட்டாயமாக அடையாள அட்டைகளைக் காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். இத்தகைய கடும் கெடுபிடிகளால், வழக்கமாக பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் ஆட்சியா் அலுவலக வளகாம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com