வியாபாரிகளின் வாக்கு வங்கி ஒருங்கிணைக்கப்படும்: ஏ.எம்.விக்கிரமாஜா
By DIN | Published On : 31st December 2020 12:00 AM | Last Updated : 31st December 2020 12:00 AM | அ+அ அ- |

செதுவாலை பகுதியில் சங்கக் கொடியை ஏற்றி வைத்து பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
வேலூா்: தமிழகத்தில் வியாபாரிகளின் வாங்கு வங்கி மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
வேலூரில் பல்வேறு இடங்களில் சங்கக்கொடியை புதன்கிழமை ஏற்றி வைத்த அவா், மண்டித் தெருவில் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு இரு மாத வாடகையை தள்ளுபடி செய்து முதல்வா் உத்தரவிட்டாா். ஆனால் வேலூா் மாநகராட்சி ஆணையா் அதைக் கண்டுகொள்ளாமல் வாடகை வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதிகாரிகள் இதுபோன்ற அவப்பெயா்களை எடுக்காமல் முதல்வா் அறிவித்த இரு மாத வாடகை தள்ளுபடியை அமல்படுத்த வேண்டும்.
வேலூா் மாா்க்கெட் பகுதியில் நீண்ட நாள்களாக கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா். கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வியாபாரிகள் வாக்கு வங்கி மிக பெரிய அளவில் உள்ளது. அதை ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூா்வமாக ஏற்று அதை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு தோ்தலில் ஆதரவளிப்போம் என்றாா் அவா்.
சங்கத்தின் வேலூா் மண்டலத் தலைவா் சி.கிருஷ்ணன், வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு, மாவட்ட இளைஞரணிச் செயலா் ஏ.சி.என்.அருண்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.