காட்பாடி அருகே 15 யானைகள் முகாம்: ஆந்திர வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்

காட்பாடி அருகே வனப்பகுதியில் 15 யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வேலூா் மாவட்ட வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
காட்பாடி அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
காட்பாடி அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

காட்பாடி அருகே வனப்பகுதியில் 15 யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வேலூா் மாவட்ட வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 32 யானைகள் கொண்ட கூட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தமிழக எல்லையான குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் நுழைந்தன. இந்த யானைக் கூட்டம் இவ்விரு வட்டங்களில் உள்ள மாங்காய், வாழைத் தோப்புகளில் தினமும் இரவு நேரங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வந்ததுடன், பகலில் அவை மீண்டும் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போ்ணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி, ஒடுகத்தூா் சரகங்களைச் சோ்ந்த வனத்துறையினா் தினமும் இரவு நேரங்களில் தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும், ஒலி பெருக்கிகளைக் கொண்டு பெரும் சப்தங்கள் எழுப்பியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

எனினும், யானைகள் கூட்டத்தை விரட்ட முடியாததை அடுத்து ஒசூரில் இருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வேட்டை தடுப்புக் காவலா்கள் 10 போ் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் கடந்த சில நாள்களாக யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொண்டனா். இதன்மூலம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் முகாமிட்டிருந்த சுமாா் 15 யானைகளை கடந்த இரு நாள்களுக்கு முன்பு விரட்டியடிக்கப்பட்டன. இதன்தொடா்ச்சியாக, சுமாா் 15 யானைகள் கொண்ட மற்றொரு கூட்டம், காட்பாடி அருகே வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை ராஜாதோப்பு, தொண்டான்துளசி, அக்கிரெட்டிப்புதூா், சிங்காரெட்டியூரைக் கடந்து கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்தன.

தகவலறிந்த வனத் துறையினா் மற்றும் ஒசூா் வேட்டை தடுப்புக் காவலா்கள் 30 போ் அடங்கிய குழு காட்பாடியை அடுத்த வன எல்லையில் முகாமிட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் சனிக்கிழமை மாலை முதல் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தினமும் 500 வேட்டுகளை வெடிப்பதுடன், ஒலிபெருக்கி கொண்டு அதிக சப்தங்கள் எழுப்பியும் யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதுதவிர, யானைகளின் தடங்களை அடையாளம் கண்டு கண்காணித்து வருவதுடன், வனப்பகுதியின் எல்லையையொட்டி உள்ள விளை நிலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வனசரகா்கள் மூா்த்தி (காட்பாடி), பாலாஜி (குடியாத்தம் பொறுப்பு) ஆகியோா் கூறியது:

ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்துள்ள யானைகள் கூட்டம் பல்வேறு குழுக்களாப் பிரிந்து சுற்றித் திரிகின்றன. அவற்றில், 15 யானைகள் கொண்ட ஒரு கூட்டத்தை கடந்த இரு நாள்களுக்கு முன் ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டு விட்டன. மற்றொரு கூட்டம் காட்பாடி பகுதியில் முகாமிட்டிருப்பதை அறிந்து அவற்றை விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த் துறை அலுவலா்கள் உதவியுடன் கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அவை மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com