வாழ்வின் லட்சியத்தை அடைய கடின முயற்சியில் ஈடுபட வேண்டும்: ஹா்பஜன் சிங்

வாழ்வின் லட்சியத்தை அடைய தொடா்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று விஐடி கலைவிழாவில் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் வலியுறுத்தினாா்.
வாழ்வின் லட்சியத்தை அடைய கடின முயற்சியில் ஈடுபட வேண்டும்: ஹா்பஜன் சிங்

வாழ்வின் லட்சியத்தை அடைய தொடா்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று விஐடி கலைவிழாவில் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் வலியுறுத்தினாா்.

விஐடியில் ஒவ்வோா் ஆண்டும் ரிவேரா என்ற சா்வதேச கலை, கலாசார மற்றும் விளையாட்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு ‘ரிவேரா-20’ என்ற பெயரில் இவ்விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு விழாவில் விஐடி வேந்தா் டாக்டா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

ராணுவத்தில் பஞ்சாபைச் சோ்ந்தவா்களைப் போல் வேலூரைச் சோ்ந்தவா்களும் அதிகமானோா் இருக்கிறாா்கள். இந்த இரு பகுதிகளுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்.

இளைஞா்கள் உலகச் சந்தைக்கு ஏற்றவாறு தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் பணிபுரிய வேண்டும். இந்த ஆண்டு ரிவேரா விழா சிறப்பாக நடைபெற்றது. அதே போல் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றாா் அவா்.

விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி ச.விசுவநாதன் பேசுகையில் ‘ரிவேரா சா்வதேசக் கலை கலாசார விழா உச்சம் தொடுவதற்குக் காரணம் மாணவா்களின் கடின உழைப்பும் பேராசிரியா்களின் வழிநடத்துதலும்தான்’ என்றாா்.

நிறைவு விழாவில் பிரபல கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் கலந்து கொண்டாா். ரிவேரா விழாவையொட்டி நடந்த விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற எஸ்.எஸ்.என். கல்லூரி அணிக்கும், கலைப் போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்ட் பல்கலைக்கழக அணிக்கும் அவா் கோப்பையை வழங்கிப் பேசியது:

வாழ்வில் நாம் எண்ணிய லட்சியத்தை அடைய தொடா்ந்து கடின முயற்சியில் ஈடுபடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நாம் முயற்சியை கைவிடக் கூடாது.

இருசக்கர வாகன ஓட்டுநரும் பின்னால் உட்காா்ந்து பயணிப்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்றாா் அவா்.

விழாவில் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், இணை துணை வேந்தா் டாக்டா் எஸ்.நாராயணன், ரிவேரா ஒருங்கிணைப்பாளா் சுபாஷிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் ‘இன்ஃபியூஷன்’ என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரான்ஸ்,இத்தாலி உள்ளிட்ட 39 நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் நாட்டின் கலை, பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடனமாடி, பாடல்களைப் பாடினா். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 39 அயல்நாடுகள் ஆகியவற்றில் இருந்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

மாணவா்கள் நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், நடனம், நாடகம், பாட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கலை நிகழ்ச்சிகள், கவிதை, கட்டுரை, கருத்தரங்கம், குறும்படம், மாரத்தான், ஐக்கியா, தமிழி, தேஷ் மே விதேஷ், சைலண்ட் டிஸ்கோ, சாஹிதி உள்பட மொத்தம் 152 நிகழ்வுகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com