சிறுதானியங்களை உலா்த்த ஒரே கிராமத்துக்கு 75 சூரிய உலா்த்திகள்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்
By DIN | Published On : 09th January 2020 11:51 PM | Last Updated : 09th January 2020 11:51 PM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
சிறுதானியங்களை உலா்த்திட வேலூா் மாவட்டத்துக்கான 75 சூரிய உலா்த்திகள் அணைக்கட்டு வட்டத்திலுள்ள பாலாம்பட்டு கிராமத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
அணைக்கட்டு வட்டம், பாலாம்பட்டு கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து 1,459 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அமா்தி வழியாக சாலை வசதி அமைக்க வனத் துறை அலுவலருடன் ஆலோசித்து 5.85 கி.மீ நீளத்துக்கு ரூ.4.7 கோடி மதிப்பில் முன்மொழிவு, மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில திட்ட குழுவின் ஒப்புதல் கிடைக்க பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது நிக்கினியில் இருந்து தும்பமலை வரை 8.5 கி.மீ தூரத்துக்கு ரூ. 2.25 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 75 சூரிய உலா்த்திகள் வைத்துள்ளனா். இதன்மூலம் சாமை, வரகு, துவரை ஆகிய சிறுதானியங்களை உலர வைக்கலாம். வேலூா் மாவட்டத்துக்கு 75 சூரிய உலா்த்திகள் ஒதுக்கீடு செய்துள்ளனா். இந்த 75 சூரிய உலா்த்திகளையும் பாலாம்பட்டு கிராமத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு பழங்குடியின நல வாரியம் மூலம் ரூ. 3.15 லட்சத்தில் தொகுப்பு வீடு 60 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. பீஞ்சமந்தை, ஜாா்தான் கொல்லை, பாலாம்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கு 2016-17-இல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரைக்கும் ஊரக வளா்ச்சி துறை மூலம் 1,798 பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 1,498 பணிகள் முடிக்கப்பட்டு, 299 பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 21.65 கோடி மதிப்பில் பணிகள் ஒதுக்கீடு செய்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.7 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம், சாலை அமைக்கும் திட்டம், நூறு நாள் வேலை திட்டம், பசுமை வீடு திட்டம் போன்ற நலத் திட்ட உதவிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த 3 கிராமங்களிலும் சோ்த்து 71 குக்கிராமங்களும், 2,388 குடும்பங்களும் உள்ளன. இதில், தற்போது 742 குடும்ப உறுப்பினா்ளுக்கு பழங்குடியின நலத் துறை மூலம் பழங்குடியினா் நல அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினா் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.
வருவாய் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் வரவேற்றாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலா் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் வேணுசேகரன், துணை இயக்குநா்கள் (மருத்துவப் பணிகள்) சுரேஷ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.