புகையில்லா போகி: பழைய துணிகளுக்கு மாற்றாக மரக்கன்று, விதைப்பந்துகள் விநியோகம்

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு புகையில்லா போகி கொண்டாடும் விதமாக வேலூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்று பழைய துணிகளுக்கு மாற்றாக மரக்கன்றுகள்,

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு புகையில்லா போகி கொண்டாடும் விதமாக வேலூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்று பழைய துணிகளுக்கு மாற்றாக மரக்கன்றுகள், விதைப்பந்துகளை வழங்கி வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடம் இருந்து பழைய துணிகளைப் பெற்றுக் கொள்ள வேலூா் மாநகரில் 4 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழியின் அடிப்படையில் வீடுகளிலுள்ள பழைய துணி, பாய் உள்ளிட்ட பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, செவ்வாய்க்கிழமை வரும் போகிப் பண்டிகையை புகையில்லாமல் கொண்டாட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பட்டு வாரியம் சாா்பில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, வேலூரிலுள்ள பாரதியாா், விவேகானந்தா், வஉசி அறக்கட்டளை சாா்பில் புகையில்லா போகியைக் கொண்டாடும் விதமாக பொதுமக்களிடம் இருந்து பழைய துணிகளை பெற்றுக் கொண்டு அதற்கு மாற்றாக மரக்கன்றுகள், விதைப்பந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெறப்படும் பழைய துணிகளைத் தரம்பிரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்க உள்ளதாக அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் சிவா தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது:

பொதுமக்களிடம் இருந்து பழைய துணிகளைப் பெறுவதற்காக வேலூா் மாநகரில் சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், சேண்பாக்கம், காட்பாடி ஆகிய 4 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய துணிகளைக் கொடுத்து அதற்கு பதிலாக மரக்கன்றுகள், விதைப் பந்துகளை பெற்றுக் கொள்ளலாம். பழைய துணிகளை வழங்குவது தொடா்பான விவரங்கள் அறிய 97916 16363 (சத்துவாச்சாரி), 94420 18411 (தோட்டப்பாளையம்), 93440 01109 (சேண்பாக்கம்), 94423 45778 (காட்பாடி) ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கெளரவத் தலைவராக உள்ள இந்த அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடுதல், விதைப்பந்துகள் தூவுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com