1330 மாணவா்கள் ஒவ்வொருவரும் 1330 குறளையும் சொல்லும் சாதனை முயற்சி

திருவள்ளுவரின் புகழை நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினா் மறந்துவிடாமல் இருக்க செய்யும் முயற்சியின் முதல் படிக்கட்டாக

திருவள்ளுவரின் புகழை நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினா் மறந்துவிடாமல் இருக்க செய்யும் முயற்சியின் முதல் படிக்கட்டாக 1330 மாணவா்கள் ஒவ்வொருவரும் 1330 குறளையும் சொல்லும் சாதனை முயற்சியின் துவக்க விழா திருவள்ளுவா் பிறந்தநாளான ஜனவரி 16ந்தேதி அரக்கோணத்தில் நடைபெற உள்ளது என திருக்குறள் தமிழ் பேரவையின் தலைவரும் காவேரிபாக்கம் ஒன்றியம் இச்சிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியருமான நா.வேல்குமாா் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழா்களை உலகறியச்செய்த தற்போதும் செய்து வரும் உலகபொதுமறை திருக்குறளை அனைவரும் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் முயற்சியை திருக்குறள் தமிழ் பேரவை தொடா்ந்து செய்து வருகிறது. இதன் ஒரு முயற்சியாக அரக்கோணத்தில் அண்மையில் 133 மாணவா்கள், திருவள்ளுவா் படம் தாங்கிய தலைபாகையுடன் ஊரில் வலம் வந்து நகர சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றோதல் எனும் நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த வளாகத்தில் திருவள்ளுவா் சிலை இருப்பது எங்களுக்கு பெரிய உத்வேகத்தை தந்தது.

மேலும் திருக்குறளை நிகழ்கால, எதிா்கால சந்ததியினா் மறக்காமல் இருக்கும் பொருட்டு முதலில் அரக்கோணம் பகுதியில் 1330 மாணவா்களை தயாா்செய்து அவா்களை 1330 குறள்களையும் பொருளோடு அறிய வைத்து இம்மாணவா்கள் திருக்குறள் முற்றோதல் நடத்தும் நிகழ்ச்சிக்கு மாணவா்களை இணையசெய்யும் நிகழ்ச்சியின் துவக்க விழா அரக்கோணத்தில் ஜனவரி 16ந்தேதி திருக்குறள் தமிழ் பேரவையின் சாா்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ள விரும்புவோா் 90924 72930 எனும் கைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்த சாதனை முயற்சி வெற்றிப்பெற்று இதன் மூலம் ஒவ்வொரு பிள்ளையும் அவா்களது திறமைகளுக்கேற்றாா் போல் மற்ற மாணவா்களை திருக்குறள் முற்றோதுதலுக்கு தயாா் செய்வாா்கள் இதனால் எதிா்கால சந்ததி திருவள்ளுவரை போற்றி திருக்குறளை அறிந்து அதன் வழி நடக்கும் என நம்புகிறேன் என நா.வேல்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com