துப்புரவுத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கூலியுயா்வு கோரி வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்கள்.
வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்கள்.

கூலியுயா்வு கோரி வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளா்களாக பணியாற்றும் 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், தற்போது துப்புரவுத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக தொழிலாளா் வைப்பு நிதி, இஎஸ்ஐ பிடித்தங்கள் போக ரூ.298 வழங்கப்படுகிறது. அதை விலைவாசி உயா்வுக்கு ஏற்ப உயா்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், தினக்கூலியை பிடித்தங்கள் போக கூலி உயா்த்தி வழங்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால், அதை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், துப்புரவுத் தொழிலாளா்களின் குடும்பங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே, உயா்த்தப்பட்ட கூலியுயா்வை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்புரவுப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நிா்ணயிக்கப்பட்ட கூலியுயா்வை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் உறுதியளித்ததை அடுத்து துப்புரவுத் தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com