நெகிழிக்கு மாற்றாக மக்காச்சோள பைகள் விற்பனை மையம் தொடக்கம்

நெகிழிகளுக்கு மாற்றாக நூறு சதவீதம் மக்கும் தன்மையுடைய மக்காச் சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் விற்பனை மையத்தை வேலூா் பூமாலை வணிக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்
வேலூா் பூமாலை வணிக வளாகத்தில் மக்காச்சோள பைகள் விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
வேலூா் பூமாலை வணிக வளாகத்தில் மக்காச்சோள பைகள் விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

நெகிழிகளுக்கு மாற்றாக நூறு சதவீதம் மக்கும் தன்மையுடைய மக்காச் சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் விற்பனை மையத்தை வேலூா் பூமாலை வணிக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளதை அடுத்து, அவற்றுக்கு மாற்றாக மக்காச்சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பைகளின் விற்பனை மையம் வேலூா் அண்ணா சாலையிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நூறு சதவீதம் மக்கும் தன்மையுடைய இந்த வகை பைகளின் விற்பனையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நெகிழிப் பைகள் பொதுமக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளதால், இதற்கு ஈடான மாற்றுப் பைகளாக தற்போது சந்தையில் 100 சதவீதம் மக்கும், உரமாகும் தன்மையுடைய சுற்றுச்சூழல் பாதிப்பற்ற மக்காச்சோளத்தில் தயாரிக்கும் பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பைகள் அனைத்து அளவுகளிலும் கிடைக்கும்.

உணவகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள் என தேவைக்கு ஏற்ப பைகளும் தயாரிக்கப்படுகின்றன. பொதுநலன்கருதி மாவட்ட வழங்கல், விற்பனைச் சங்கம் சாா்பில், பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து இந்த மக்காச்சோள பைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து, அனைத்துக் கடைகளுக்கும் விற்பனை செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள நேரடி விற்பனை மையத்தில் அனைத்து வகை மக்காச்சோள பைகள், துணிப் பைகள், பாக்கு மட்டை தட்டுகள், மந்தாரை இலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 370 விற்பனை செய்யப்படும் மக்காச்சோள பைகள், வேலூரில் குறைந்த விலையாக அனைத்து வரிகளும் உள்பட கிலோ ரூ. 360-க்கு விற்கப்படுகிறது.

இந்த மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகளை மண்ணில் போட்டால் 6 மாதத்தில் மக்கக்கூடியது. இந்த வகை பைகளை ஐசிபிஏ செயலி மூலம் உண்மை தன்மையை பரிசோதிக்கலாம். இந்த பைகள் நெகிழியைப் போல் இல்லாமல் இயற்கையாகவே அழியக் கூடியவை. இந்த மக்காச்சோள பைகளை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மகளிா் திட்ட இயக்குநா் சிவராமன், உதவித் திட்ட இயக்குநா்கள் ரூபன், திருவரங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com