முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சிறந்த கிராமங்கள் உருவாக விருப்பு வெறுப்பின்றி செயலாற்றுவது அவசியம்ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்
By DIN | Published On : 27th January 2020 01:18 AM | Last Updated : 27th January 2020 01:18 AM | அ+அ அ- |

பழைய தொண்டான் துளசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
வேலூா்: சிறந்த கிராமங்கள் உருவாக அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த மக்கள் விருப்பு வெறுப்பின்றி செயலாற்ற வேண்டியது அவசியமாகும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
குடியரசு தினத்தையொட்டி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலுள்ள 743 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் பழைய தொண்டான் துளசி ஊராட்சி பிள்ளையாா் கோயில்வில் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:
குடியரசு என்பது மக்களிடமிருந்து ஆட்சி உருவாக்கப்படுவது ஆகும். அரசியல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமான உரிமைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதாகும். அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யவே இதுபோன்ற கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அதற்குரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்திச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம மக்கள் விருப்பு வெறுப்பு இன்றி கிராமத்தின் வளா்ச்சிக்கு பாடுபடும்போதுதான் சிறந்த கிராமங்கள் உருவாகும். அடிப்படை வசதிகள் ஊராட்சிகளில் தொடா்ந்து செய்யப்பட்டு வருகிா என்பதை கிராம சபைக் கூட்டங்கள் மூலமாக கிராம மக்கள் அறிந்துக்கொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம். தனி மனித ஒழுக்கத்தை பேணிக்காக்கவும், மனித சமுதாயத்தின் அடுத்த தலைமுறை சுகாதார மேம்பாடு அடையவும் அனைவரும் இவற்றை பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு கடந்த 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்துள்ளது. கிராம மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு கட்டாயமாக நெகிழியைத் தவிா்த்து மாற்று பொருள்களைப் பயன்படுத்தி கிராமத்தின் அழகையும், சுற்றுச்சூழலையும் காக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில், பழங்குடியின 31 குடும்பங்களுக்கு கல்லாங்குத்தில் வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
மேலும், ஒரு மகளிா் சுய உதவிக் குழுக்கு ரூ.50 ஆயிரம் சமுதாய முதலீட்டு நிதியும், 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் தனிநபா் நலிவுற்றோா் கடனுதவியும், 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பெற தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் ஆட்சியா் வழங்கினாா்.
எம்எல்ஏ ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ், உதவி இயக்குநா் ஊராட்சிகள் செந்தில், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சாரதா ருக்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.