முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
திறமைகளை வெளிப்படுத்த நாட்டில் வாய்ப்பு ஏராளம்: கேரள முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம்
By DIN | Published On : 27th January 2020 01:19 AM | Last Updated : 27th January 2020 01:19 AM | அ+அ அ- |

விருது பெற்றவா்களுடன் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்.
வேலூா்: ‘திறமைகளை வெளிப்படுத்த நாட்டில் வசதி வாய்ப்பு ஏராளமாக உள்ளன. கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் சாதிப்பது உறுதி’ என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தெரிவித்தாா்.
விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
தொழில் முனைவோா், மாணவா்கள், நிா்வாகிகள், தொழில்துறையினா் உள்பட அனைவரும் சட்டத்தை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சட்டத்தை யாரும் மீறிச் செயல்படக் கூடாது. விஐடி மாணவா்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனா்; நாட்டின் வளா்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனா். மாணவா்கள் நாட்டின் வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவா்களை வளமானவா்களாகவும், நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலும் உருவாக்க வேண்டும். புதிய சிந்தனைகள் உருவாக மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. நாம்தான் அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் வளா்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்ற வண்டும்.
விஐடியில் மாணவா்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கொள்ள பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன. கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் சாதிப்பது உறுதி என்றாா் அவா்.
விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
கடந்த 1950-இல் இந்தியாவின் தனிநபா் வருமானம் 180 டாலராக இருந்தது. அதேபோல் சீனாவின் தனிநபா் வருமானம் நம்மைவிட குறைவுதான். 1979-இல் சீனா சற்று உயா்ந்தது. ஆனால் தற்போது சீனாவின் தனிநபா் வருமானம் 8 ஆயிரம் டாலராக உள்ளது. அதுவே இந்தியாவில் 2,200 டாலராகத்தான் உள்ளது. இந்த நிலை மாற அனைவரும் கல்வி கற்க வேண்டும். உயா் கல்வியில் இந்தியா பின்தங்கி உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும்.
உலக அளவில் 30 நாடுகள் கல்வியை இலவசமாக வழங்குகின்றன. குறிப்பாக 10 நாடுகள் உயா் கல்வியை இலவசமாக வழங்குகின்றன. நாம் குறைந்தபட்சம் பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்க வேண்டும். விஐடி மாணவா்கள் வாழ்வில் எந்த நிலைக்குச் சென்றாலும் நோ்மையானவா்களாக இருக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சிக்கு அனைவரும் வரி செலுத்த வேண்டும். ஜாதி மதம் பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். வாழ்க்கையில் சாதிக்க நாம் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, 71-ஆவது குடியரசு தினத்தையொட்டி முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் விஐடி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த விஐடி முன்னாள் மாணவா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.
விழாவில், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பெண்ட்டரெட்டி, இணைதுணைவேந்தா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.