முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க மத்திய அரசு முயற்சி: துரைமுருகன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 27th January 2020 05:00 PM | Last Updated : 27th January 2020 05:00 PM | அ+அ அ- |

வேலூர்: கல்வியைத் தொடர்ந்து சுகாதாரத் துறையும் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சி நடைபெறுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேலூரில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது,
"எந்தெந்த துறைகள் எந்தெந்த பட்டியலில் இருக்க வேண்டும் என்பதற்கு வரைமுறை உள்ளது. இதில், மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வித் துறை ஏற்கெனவே மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. தற்போது சுகாதாரத் துறையையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் காவல், நிதி நிலை என அனைத்துத் துறையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு மாநில அரசுகள் என்பது கிராம ஊராட்சி நிர்வாகங்களை விட மோசமாகிவிடும்.
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் பல காலமாக தேடப்பட்டு வந்தவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துத்தான் ஆக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுவதற்கு, இது அவரது குடும்பத்துச் சொத்து அல்ல. அரசு நிதியை முறையாகப் பகிர்ந்தளித்தாக வேண்டும். மேலும் அமைச்சர் கருப்பணனை பதவி நீக்கம் செய்திடவும் தமிழக ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்.
தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாகும். ஹைட்ரோகார்பன் திட்டம் வந்தால் காவிரி டெல்டா பகுதியில் ஒருபிடி சோற்றுக்குக்கூட பஞ்சம் ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்றார் அவர்.