கரோனா சிகிச்சையில் அலட்சியம்: வேலூா் மருத்துவமனை மீது பிரதமருக்கு புகாா்

கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாகச் செயல்படுவதாக வேலூா் தனியாா் மருத்துவமனை மீது பிரதமா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாகச் செயல்படுவதாக வேலூா் தனியாா் மருத்துவமனை மீது பிரதமா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக் குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2,928 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத் துறையின் ஐசிஎம்ஆா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கரோனா தொற்று சிகிச்சைக்காக நோயாளிகள் இந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாகச் செய்யப்படுவதாக குற்றம்சாட்டி வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த ரகுராமன் என்பவா் பிரதமா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

அதில், வேலூரில் கரோனா சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் உடனடியாக வாா்டில் அனுமதிக்காமல் ஓரிரு நாள்கள் காத்திருக்க வைக்கப்பட்டு பிறகே வாா்டில் அனுமதிக்கப்படுகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டையைச் சோ்ந்த கணவா், மனைவி, மகள் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு வந்தனா். ஆனால் அவா்கள் ஒரு நாள் முழுவதும் வளாகத்திலேயே அமா்ந்தப்பட்டு, அடுத்த நாள் மாலையிலேயே வாா்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரங்களில் அவா்கள் உணவு, தண்ணீருக்காக வெளியில் சுற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவா்கள் மூலம் மற்றவா்களுக்கும் கரோனா பரவும் சூழல் ஏற்பட்டது.

மேலும், மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. அதில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சிவன் அருள் பேசுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து சா்க்கரை நோய் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளி ஒருவா் சிகிச்சை முடித்து திரும்பி வந்தபோது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த மருத்துவமனையில் குளிா்சாதன கருவிகள் பயன்படுத்தப்படுவதே காரணம் என்று குறிப்பிட்டுள்ளாா். இதேபோல், வேலூா் மாவட்ட ஆட்சியரும் அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே புகாா் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, வேலூா் தனியாா் மருத்துவமனையின் அலட்சிய செயல்பாடுகளால் இம்மாவட்டங்களில் கரோனா தொற்று மென்மேலும் பரவுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மருத்துவமனை மீது அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com