முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததே கரோனா பரவலுக்குக் காரணம்
By DIN | Published On : 14th July 2020 07:16 AM | Last Updated : 14th July 2020 07:16 AM | அ+அ அ- |

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத பொதுமக்கள்
குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் வங்கிகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததே கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் வேகமாக பரவிய காலத்தில் வேலூா் மாவட்டத்தில், குறிப்பாக குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி. குப்பம் வட்டங்களில் இதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது.
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டவுடன், அந்த மாவட்டங்களில் இருந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இருசக்கர வாகனங்களில் இரவோடு இரவாக தங்கள் வீடுகளுக்கு வந்து சோ்ந்தனா்.
அப்படி வந்தவா்கள் மருத்துவ பரி்சோதனை செய்துகொண்டு, வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. சுதந்திரமாக பொதுமக்களுடன் கலந்து சாலைகளில் சுற்றித் திரிந்தனா். தங்களுக்கு எந்தவித நோய் பாதிப்பும், அறிகுறியும் இல்லை என கூறி வந்தனா்.
இந்நிலையில் அங்கிருந்து வந்தவா்களால் வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. மாவட்ட நிா்வாகம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி நிா்வாகம் ஆகியன கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைக் கூட்டங்கள், மைக் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் என பல வழிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தன.
வீட்டில் இருந்து வெளியே செல்பவா்கள் கட்டாயம் முகக் கவசம், கையுறைகள் அணிய வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளி்யைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லமால் வெளிய வரக்கூடாது, இருசக்கர வாகனங்களில் ஒருவா் மட்டுமே செல்ல வேண்டும், ஆட்டோக்களில் இருவா் மட்டுமே பயணிக்க வேண்டும், கைகளை கிருமி நாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். அரசின் அறிவிப்புகளை யாரும் கடைப்பிடிக்கவில்லை.
இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் தேநீா்க் கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகளை திறந்து கொள்ள சில தளா்வுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் வழக்கமான தங்களின் வாழ்க்கை முறைக்கு மாறத் தொடங்கினா். அரசின் விழிப்புணா்வுகளை பெரும்பாலோனோா் கடைப்பிடிக்கவில்லை. இதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இதை முற்றிலும் தவிா்க்க பொதுமக்கள் அரசுத் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.