வனப்பகுதியை உருவாக்க 25 ஏக்கா் நிலத்தில் மரக் கன்றுகள் நடும்பணி: வேலூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

குடியாத்தம் அருகே பாலாற்றுப் படுகையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, 25 ஏக்கா் நிலத்தில் 3,600 மரக் கன்றுகள் நடும்
உள்ளி  ஊராட்சி  அருகே  பாலாற்றுப்  படுகையில்  3,600 மரக் கன்றுகள்  நடும்  பணியைத்  தொடக்கி  வைத்த  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.
உள்ளி  ஊராட்சி  அருகே  பாலாற்றுப்  படுகையில்  3,600 மரக் கன்றுகள்  நடும்  பணியைத்  தொடக்கி  வைத்த  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.

குடியாத்தம் அருகே பாலாற்றுப் படுகையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, 25 ஏக்கா் நிலத்தில் 3,600 மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், ஊராட்சி, அரசு புறம்போக்கு நிலங்களில் பசுமை வளம், வன வளத்தை மேம்படுத்தும்பொருட்டு பழம் தரும் மரங்களான மா, கொய்யா, சப்போட்டா, புளி, உயா்தர விலை தரும் தேக்கு, வேம்பு போன்ற மரக்கன்றுகள் இங்கு நடப்படுகின்றன.

குடியாத்தத்தை அடுத்த உள்ளி ஊராட்சி அருகே பாலாற்றுப் படுகையில், அக்கிராமத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஜி.ஸ்ரீகாந்த் (30) தனது சொந்த செலவில் 1,000 மரக் கன்றுகளை நட்டு, டிராக்டா் மூலம் தண்ணீா் பாய்ச்சி பராமரித்து வந்தாா். மேலும், அங்கு வனப்பகுதியை உருவாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரத்திடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

இளைஞரின் விருப்பத்தை அறிந்த ஆட்சியா், அவரை ஊக்குவிக்கும் வகையில் முதல்கட்டமாக அவருக்கு 500 மரக் கன்றுகளை வழங்கி, அதை நட்டு பராமரிக்க கூறினாா். ஊராட்சியில் பயனற்ற நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து, அதில் மின்மோட்டாா் பொருத்தி அதிலிருந்து தண்ணீா் எடுத்து மரக்கன்றுகளுக்கு பாய்ச்சும் வகையில் வசதிகளை செய்து தருமாறும், மரக்கன்றுகள் பராமரிப்புப் பணிகளுக்கு நாள்தோறும் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் 6 பேரை அவருக்கு உதவியாக நியமிக்கவும், ஊரக வளா்ச்சித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆட்சியா் கூறியது போல், மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு அவை நன்கு வளா்ந்து வருகின்றன. மேலும், பாலாற்றுப் படுகையில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, அதில் மரக்கன்றுகள் நட இளைஞா் விருப்பம் தெரிவித்தாா்.

இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா், வட்டாட்சியா் தூ.வத்சலா ஆகியோா் அங்கு சென்று பாலாற்றுப் படுகையில் கிராம மக்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 25 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அந்த நிலம் பொக்லைன் இயந்திரம் மூலம் மரக்கன்றுகள் நடும் வகையில் சமன்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில், காட்பாடியில் உள்ள நா்சரியில் இருந்து 3,600 மரக் கன்றுகள் திங்கள்கிழமை ஸ்ரீகாந்திடம் வழங்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை உள்ளி ஊராட்சிக்குச் சென்ற ஆட்சியா் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து 25 ஏக்கா் நிலத்தில் மரக்கன்றுகள் நடவும், அவற்றை பராமரிக்கவும், நாள்தோறும்100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் 40 பேரை நியமிக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலா் கு.பாரிக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்தி எதிரொலி: சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கவும், பறவைகள், சிறு விலங்குகள் பாதுகாப்பாக வாழவும் தான் பிறந்த கிராமத்தில் அரசு உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞா் குறித்து கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியானது. இந்தச் செய்தியில் இளைஞரின் விருப்பம் குறித்து தெளிவாக, விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞரை ஊக்குவிக்கும், வகையிலும், கிராமத்தில் வனப்பகுதியை உருவாக்கும் பொருட்டும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com