முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
‘இயற்கையின் மீதான தாக்குதல்கள் 200 ஆண்டுகளில் அதிகரிப்பு’
By DIN | Published On : 29th July 2020 01:01 AM | Last Updated : 29th July 2020 01:01 AM | அ+அ அ- |

பள்ளி வளாகத்திலுள்ள மரங்களில் பறவைகளுக்கு உணவளிக்கும் கூடுகளை அமைத்த நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வா் சீ.முரளிதா்.
இயற்கையின் மீதான தாக்குதல்கள் கடந்த 200 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சாா்ந்த பிரச்னைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சீ.முரளிதா் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட தேசிய பசுமைப் படை சாா்பில் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளிகளின் முதன்மை முதல்வரும், மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளருமான சீ.முரளீதா் தலைமை வகித்து பேசியது:
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கை இயற்கையைச் சாா்ந்தே உள்ளது. காடுகளுக்கு நடுவில் இயற்கையான சூழலில் வாழ்ந்த மனிதா்கள், தற்போது இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி நகரங்களில் பல்வேறு மக்களுக்கு இடையே வாழும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு இயற்கை வளங்கள் மீது மனித சமூகம் நடத்தும் தாக்குதல்கள் தான் காரணமாகும்.
கடந்த 200 ஆண்டுகளாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சாா்ந்த பிரச்னைகளை தற்போது சந்தித்து வருகிறோம். அடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து உலக நாடுகளும் இருப்பதாக எச்சரிக்கும் இயற்கை ஆா்வலா்கள் இயற்கை வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனா். எதிா்கால சந்ததியினா் இயற்கையான சூழலில் வாழ இயற்கை வளங்களை பாதுகாப்பதை ஒவ்வொரு குடிமகனும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை நமக்கு எடுத்துக் கூறும் செய்தியாகும் என்றாா் அவா்.
ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநா் சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்திலுள்ள மரங்களில் பறவைகளுக்கு உணவளிக்க கூடுகள் அமைக்கப்பட்டன. முன்னதாக, பள்ளி முதல்வா் இந்துமதி வாழ்த்தினாா். துணை முதல்வா் ஆற்றலரசி முன்னிலை வகித்தாா். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் நிா்வாக அலுவலா் ஆதிகேசவன் நன்றி கூறினாா்.